செவ்வாய், 14 டிசம்பர், 2010

தமிழில் தேசிய கீதமும் நம் தேசத்தில் இனவாதமும்


    இனிமேல் அரச நிறுவனங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படமாட்டாது. இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் நமக்கு வாகனங்களின் இலக்கத்தகட்டில் சிங்கள சிறி இடப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது. (சிலருக்கு தனிச் சிங்களச் சட்டத்தை நினைவு படுத்தலாம். ஆனால் வித்தியாசம் விளங்கிக் கொள்ளப்படவேண்டியது அவசியம்.) அதற்கு எதிராக "நண்டெழுத்து நமக்கு வேண்டாம்" எனப் பெரும் எதிர்ப்புக்களும், அபத்தமான பல போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது 50களில்.

    இன்று அபிவிருத்தி, ஆச்சரியம் எனச் சொல்லிக்கொண்டு அசுமாத்தமே இல்லாமல் இலங்கைத் தீவு மீண்டும் இருளுக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் சுழலில். இவ்விடயம் அராயகத்தின் இன்னொரு அடிவைப்பாக அமைகின்றது. விலைவாசியின் மிக வேகமான உயர்வு, 40 000க்கு மேற்பட்ட பட்டதாரிகள் உட்பட பல லட்சக்கணக்கானோருக்கு வேலையின்மை, மீகுடியேறிய மக்கள் இன்னும் இறுதி யுத்தகால நிலைமைக்குள் வைக்கப்பட்டு இருத்தல் போன்ற பாரிய பிரச்சினைகளுள் இந்த வாய்ச்சவடல் எத்தகைய முக்கியத்துவப்படுத்தப்படுகிறது? என்பதை நாம் பார்க்கவேண்டும். 

"இந்தத் தேசிய கீதமெல்லாம் நம் தேசத்தின் ஓர் உயிரின் முன் தூசி" 

ஆனால். இந்த மக்கள் நலனில் அதிக அக்கறையுள்ள அரசியல்வாதிகளோ நம்மை 50களில் கொண்டுபோய் விட்டுவிட்டு மீடும் கடந்தகால நிலைமைகளை மீழ்உருவாக்கம் செய்ய முயல்கிறார்கள். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக இம்முறை தமிழ் மொழிமூலம் ளுடுயுளு பரீட்சை எழுதிய எவரும் சித்தியடையாமையையும், வட கிழக்குப் பிரதேச அரச ஊழியர்களாக இப்போது அதிகமான சிங்களவர்கள் நியமிக்கப்படுவதையும் (அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிகளுக்கு மாத்திரம் ஒரு சில தமிழர் நியமிக்கப்படுகின்றனர்) கூறலாம்.

       தமிழ்க் கூட்டணி மீண்டும் எழுபதுகளில் சொன்னவற்றை அப்படியே அச்சரப் பிசகின்றித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அது இந்தியாதான் இலங்கைத் தமிழருக்கு விடிவைப் பெற்றுத் தரவேண்டும் என்கிறது. இதைத் தாண்டிச் சிங்களத் தலைமை 50 களுக்குக் கொண்போய் சிங்கள மக்களை உணர்சிவசப்படுத்தி வயித்தில் அடிக்கப் பார்க்கிறது. 

          இந்நிலையில் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். மிகவும் சுலபமாகக் கடந்த காலத்தை மறந்து விட்டு, இந்தப் பேய்க்காட்டு அரசியலில் விழுந்து ஏமாந்து அழியப் போகிறார்களா? அல்லது கடந்தகாலப் படிப்பினைகளைக் கொண்டு சரியான போராட்ட மார்க்கத்தைத் தெரிவுசெய்து போராடப் போகிறார்களா?



     "நாங்கள் போராட்டத்தால் நல்லா அனுபவிச்சிட்டம், இனி உந்தப் போராட்டம் கீராட்டம் பற்றியெல்லாம் வந்து எங்களோட கதயாதையுங்கோ" என்பதுதான் ஒரு சாதாரண ஈழத் தமிழனின் இன்றைய நிலைப்பாடு. ஆனால் வாழ்க்கையோ நினைக்கிறமாதிரி இல்ல. அதிகாரம் அமைதியாய், சந்தோசமாய் இருக்க ஒருநாளும் அனுமதியாது.

கரைகள் ஓய்வை விரும்பிநாலும் அலைகள் விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பிநாலும் காற்று விடுவதில்லை
ஓடிஓடி ஒளிந்தாலும் வாழ்க்கை விடுவதில்லை........!

சுடும்வரை நெருப்பு! சுற்றும்வரை பூமி! போராடும்வரை மனிதன்!

புதன், 10 நவம்பர், 2010

தொப்புள் கொடி உறவு

வன்னி வள மண்ணில்
வாழும் மனிதருக்கோர் வீடில்லை
தேடி வருவோர்க்கு 
நாடி நலம் நல்குமவருக்கோர்
வாசல் படியில்லை
விளம்பரத் தட்டிகள் மட்டும்
விண்ணை முட்டி முழைக்கிறதே!

செம்மணியில் விதைக்கப்பட்ட
எம்மவர் சவக்குழிமேல்
விளம்பரப் பதாகைகள் 
விளைவு கொண்டு நிற்கிறதே!
யாருக்காய் அவர் மாண்டார்?
யாழின் வரவேற்பில் 
யாரை வரவேற்க அங்கவர் புதைபட்டார்?
உண்மை புரிகிறதா யாழ் மானத்தின் உத்தமரே?

காலிழந்த பிஞ்சுகளைத் தாங்க ஒரு
கைத்தடிக்கு மரமில்லை,
கொன்ரெயினர்களில் எங்கு கொண்டுசெல்கிறார்கள்?

மணல்காட்டில் வீடு கட்ட மாமனுக்கு
மணலனுமதியில்லை
வந்த லொறி சும்மா போகாமல் 
சுண்ணாம்பைச் சுமக்கிறதாம்

உதுக்குத்தான் உவளவுமென்டு
உரைத்ததின்னும் உறைக்கேல்லை!
உதைய சூரியனுக்கும் வீட்டுக்கும் ஓட்டைப்போட்டு
ஒட்டாண்டியானோமே!

தொப்புள் கொடி இப்ப
உறிஞ்சும் ஸ்றோவாக ஆனதைய்யா!
நஞ்சுகளை உமக்கனுப்பி 
நல்லி ரத்தம் உறிஞ்சுதணை!

ஐஞ்சாறு நூற்றாண்டாய் அடிமைகளாய் இருந்துவிட்டோம்
அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழவேணும்
இனியும் காலணியாய் இருக்க நாம் சம்மதித்தால்
கடைசிவந்தும் அணையாது அனுமர்கள் ஆக்கிய தீ..............



மண்ணின் மைந்தர்கள்











நம்பிக்கைகளுக்கு உயிர் கொடுக்கும்
நல்ல மனிதர்களே! – பேராதிக்கத்
தும்பிக்கைகளை அறுத்தெறிய
வல்ல தோழர்களே!

தண்டகாருண்யக் காட்டினில் வாழும்
பூமித் தாயின் புத்திரர்களே!
ஆயிரம் நட்சத்திர விடுதியில் வாழும்
அழகுத் தேவர்களே!

மாமனிதன் மாவோவின் வளியில் போரிடும்
மண்ணின் மைந்தர்களே!
நாளையில்லை, இன்றேயெங்கள்
வாழ்வை எமதாக்குகின்ற
வேளை கூடி வந்ததென்று
வேற்றிமுரசு கொட்டுங்களே!

புதன், 20 அக்டோபர், 2010

இறந்துபோய்விடுமா இலங்கையில் தமிழ் ஆய்வு? பாகம் 2

இனி, இங்கு இடம்பெற்ற ஆய்வரங்குகள் தொடர்பாக சுருக்கமாகக் குறிப்பிட்டால் நீங்கள் விரிவான விளக்கத்தைப் பெறமுடியும் எனக் கருதி, மொத்தம் 13 அமர்வுகளில் நான் விரும்பித் தவிர்த்தது போக, ஏனையவை பற்றி எனது பார்வையில் சற்று விளக்க முனைகிறேன்.

1வது அரங்கு மிகவும் காத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் களப்பிரர்கள் பற்றிக் கட்டுரை சமர்பித்த சோ.சாந்தலிங்கம், அரசுக்கெதிராக கலவரங்கள், கிளர்ச்சிகள் செய்து ஆட்சியைக்கைப்பற்றிய தமிழ் நாட்டின் சூத்திரர்கள் எனப்பட்ட சாதாரண விவசாயிகள் அல்லது நிலப்பிரபுக்கள்தான் களப்பிரர் என்ற கருத்தை மறுதலித்து, சித்தூர் பகுதிகளில் இருந்து வந்த கலியரசர்கள் என்னும் கருத்துடன் ஒட்டிச் சில கருத்துக்களை முன்வைத்தார். கே.இராஜன் பொருந்தலில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் தனது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலத்தின் ஈமச்சவக்குழிகள் பற்றிய தகவல்கள் மூலம் அனைவரையும் திகைப்பிலாழ்த்தினார். மன்னர்களதோ அல்லது நிலப்பிரபுக்களுடையதாகவோ இருக்கக்கூடிய இக்குழிகளை பொதுமக்களுடையது எனத் திரும்பத் திரும்பக் கூறியதை அவதானிக்க முடிந்தது. இக் கண்டு பிடிப்புக்கள் பற்றிப் பின்னரும் இரு தடவைகள் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
வைணவம் எனும் தலைப்பில் அடுத்த அமர்விலே கட்டுரை சமரப்பித்த சு.வெங்கட்ராமன் மிக வேகமாக அக்கால இலக்கியங்களில் வைணவம் தொடர்பாக இருந்த அனைத்து கருத்துக்களையும் அள்ளிவீசினார். அவரைத் தொடர்ந்து சமணம் பற்றிக் கட்டுரை வாசித்த எஸ்.இராஜவேலு இக்காலத்தைவிடப் பக்திநெறிக்காலத்திலேயே சமணம் பற்றி அறிய அதிக தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதாகவும், இக்காலத்தில் மிகவும் குறைவான தொல்லியல் ஆதரங்கள் கிடைப்பதால் தன்னால் பெரிதாக எதுவும் கூறமுடியாது என்று, சமண சமயம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் பற்றித் தெளிவாகக் கூறிச் சென்றார். அதற்கு வேதாசலம் இறுதியில் மிக விளக்கமான கருத்துரை கூறியதன் மூலம் இலக்கிய வரலாற்றைக் காப்பாற்றினார். இறுதியில் பக்தி இலக்கியப் பாரம்பரியத்தில் காரைக்கால் அம்மையார் எனும் தலைப்பில் கட்டுரை வாசித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.நதீரா மிகவும் பரந்த வாசிப்பின் மூலம் தயார்ப்படுத்தப்பட்ட, சிறப்பான கட்டுரையொன்றை வாசித்தார்.
……………………………………….
நான் மிகவும் திட்டமிட்டுத் தவிர்க்க நினைத்த இரண்டாம் நாளின் முதலாவது அமர்வின் இறுதிக்கட்டத்தில் என்னுடைய நேரக்கணிப்பின் தவறால் தவிர்க்க முடியாமல் பங்குபற்ற நேர்ந்தது. அவ் அமர்வின் இறுதி ஆய்வுக்கட்டுரையை சைவம் என்னும் தலைப்பில் தயாரித்தளித்த திருமதி விக்னேஸ்வரி பவநேசன் (அண்மைய எந்த ஒரு ஆய்வரங்கிலும் தவறாது கட்டுரை சமர்ப்பிப்பதை நான் கண்டிருக்கிறேன்) மிகத் தீவிரமான சைவ சமயப் பிரச்சாரத்தினை நடத்தினார், அதில் உச்சக்கட்டமாக திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடப்படும் இறைவன் சிவன் என்னும் பெருங் கண்டுபிடிப்பையும் முன்வைத்தார். இவை எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தால் போல் “போப் குறிப்பிட்ட முப்பொருள் அறம், பொருள், இன்பமா? பதி, பசு, பாசமா? ” என்ற ஒரு கேள்விக்கு, “அது அவருக்குத்தான் தெரியும். நாம் நமக்கேற்ற விதத்தில் அதை எடுத்துக்கொள்ளலாம்” என்ற விடையைக் கூறித் தன் அறிவாற்றலை வெளிப்படுத்தினார். 
அதற்கு அடுத்த அமர்விலே சிலப்பதிகாரத்திலே அழகியற் சிந்தனை எனும் தலைப்பில் யாழ் பல்கலையின் நுண்கலைத் தலைவர் கா.சிவத்தம்பியின் கருத்துக்களை எந்தவொரு அட்சரப் பிழையுமின்றி அப்படியே பெருமிதத்துடன் ஒப்பித்தார். விரிவுரைகளில் பெறப்பட்ட குறிப்புக்கள் பரீட்சைக்கு மாத்திரமல்ல, ஆய்வுக்கட்டுரைக்கும் அப்படியே உதவும் என்பதை அறிந்து, நான் விரிவுரைகளில் அதிகளவு குறிப்புக்களை எடுக்காததையிட்டு வருந்தினேன். 
5வது அமர்விலே ஈழத்தின் அறநூல் பதிப்பு முயற்சிகள் தொடர்பான சிவலிங்கராஜாவின் உரை பல புதிய தரவுகளைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதாய் அமைந்தது. ஆனால் அடுத்த அமர்விற்குத் தலைமை தாங்கி அவர் ஆற்றிய உரை அவரையும் ஆசிரியரைத் தாண்டாத மாணவனாக நிறுவியது. 
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆய்வரங்கில் வள்ளுவரின் அரசியலும், அழகியலும் என்னும் தலைப்பில் தனது கட்டுரையைச் சமர்ப்பித்த இரகுபரன், திருக்குறளில் அரச சர்வாதிகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள அரிய பல கருத்துக்களைத் தொகுத்துக் கூறினார். இதில் தான் எந்தவொரு அரசியல் கருத்துக்கும் சார்பானவரொ, எந்தக் குழுவுடனும் தொடர்புள்ளவரோ இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக, மிகக் கவனமாக கருத்தியல் அடிப்படையெதுவும் அற்ற உள்ளடக்க விபரிப்பை மேற்கொண்டார். இதன்பின் திருக்குறளில் அதிகார வைப்பு முறை என்னும் தலைப்பிலான கதாப்பிரசங்கம் ஒன்றை சிறீப்பிரசாந்தன் நிகழ்த்தினார். தான் புதிதாகத் திருமணம் செய்தவர் என்பதையும், மனைவி பற்றியும் குறிப்பிட்ட அவர் அதன் உச்சமாக தமிழ் இன உணர்வு மீதுரப் பெற்று, இன்றைய இலங்கை அரசின் போக்கு, வணிகயுகத்தை ஒத்திருப்பதாலேயே இவ் ஆய்வரகிற்கான தலைப்பைத் தெரிவு செய்ததாகவும், ஆய்வுகளில் பேசப்படும் அரசியலை அனைவரும் கவனிக்க வேண்டும் எனவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டார். பக்கத்தில் வாளேந்திய சிங்கக்கொடி பறந்துகொண்டிருந்தது. இவ்வரங்கில் திருக்குறளில் உவமை நயம் என்னும் தலைப்பில் சைவப்புலவர் து~;யந்தன் என்பனர் திருக்குறளிலுள்ள உவமைகளின் எண்ணிக்கைகளைப் பட்டியலிட்டதாக இன்னொரு ஆய்வாளர் பெருமைப்பட்டுக்கொண்டார். 
அடுத்து இடம்பெற்ற எட்டாவது அமர்வில் திருக்குறளில் சமுதாயநெறி என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்த மா.ரூபவதனன் அறிமுகத்திற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு, ஆய்வுப்பரப்பை பற்றி அதிகம் பேசாமலேயே சென்றார். திருக்குறளில் அறிவாராய்ச்சியியல் என்னும் தலைப்பில் அடுத்து கட்டுரை படிக்க முனைந்த இளம் ஆய்வாளர் ச.முகந்தன், கதாப்பிரசங்கப் பரம்பரையின் அடுத்த வாரிசாக மிளிர்ந்தார். அவர் அறிவாராய்ச்சியியல் பற்றி க.பொ.த உ.த அளவையியல் பாடத்திட்டத்தில் உள்ள பல விடயங்களையும் விளாசித் தள்ளிவிட்டு திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள பாலியல் இன்பம் தொடர்பாக ‘ பாலியல் சுகம் அறிய அறிய ஆவலைத்தூண்டுவது, அறிந்து முடிக்க முடியாதது…’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறளை, விஞ்ஞான அறிவென்பது முடிவற்றது, அது ஆய்வுகளினூடான கண்டுபிடிப்புக்களின் மூலமாகவும், பொய்ப்பித்தலின் மூலமாகவும் மாறிக்கொண்டே இருக்கும் என்னும் பொருள்பட எடுத்து விளக்கியமை தாங்க முடியாததாக இருந்ததுடன், அதற்கான பத்மநாதனின் பாராட்டு பயப்பட வைத்தது.
இந்த அலுப்புகளும், அறுவைகளும் அடுத்த அமர்வுகளில் அரங்கேறியவர்களாலும் அழகாகதட தொடரப்பட்டன. அதில் வெற்றிபெற்றவர்களாக துரை. மனோகரன், ஈஸ்வரநாதபிள்ளை குமரன், வசந்தா வைத்தியநாதன், எஸ்.செல்வரஞ்சிதம், திருமதி சுகந்தினி ஸ்ரீதரன், செல்வி எஸ். சேல்வகுமாரி, திருமதி சுகந்தினி சிறீதரன் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் இறுதி இருவரும் ஆய்வரங்கிற்குப் புதியவர்கள் என்பதால் அடியேன் எதிர்பார்ப்புடன் அமர்ந்து அடியுண்டேன். உள்ளடக்க விபரிப்புக்களாக ரூபி வலன்ரினா, செ.யோகராஜ போன்றவர்களினது கட்டுரைகள் அமைந்தன.
இக்கால வணிகம் பற்றிப் பேச இருந்த ஒரு தலைப்பையும் வ.மகேஜஸ்வரன் தனது வசதிக்காக ஆசாரக்கோவை பற்றியதாக மாற்றிக்கொண்டார். ஆனாலும் அவரின் கட்டுரை வணிக யுகம் பற்றிய சரியானதொரு பார்வையை மீள்வலியுறுத்தியது. ஆய்வாளர் எவரும் அவற்றைக் கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை. இக்காலக் கலைகள் தொடர்பாக சி.மௌனகுரு கேரளாவில் இன்றும் ஆற்றுகை நிலையில் உள்ள ஒரு இக்காலக் கூத்தின் ஒளிப்படத்தைக் காண்பித்து பரவசத்தில் ஆழ்த்திவிட்டு, சிவத்தம்பியின் ஆய்வுக்கருத்துக்களை ஒப்பித்தார். இடைநிலைக் கலை என வேத்தியல் - பொதுவியல் வேறுபாட்டுக்குள் இருந்து ஆய்ச்சியர் குரவையை வேறுபடுத்துவதுபோல் கூறிக் கடைசிவரை அது பற்றி எதுவும் கூறவில்லை. (கடைசியில் உரையாடும்போது கூட) ஆனால், அமர்வின் இறுதியில் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது சில நல்ல கருத்துக்களைக் குறிபிட்டார்.
இறுதிநாளான சனிக்கிழமை இடம்பெற்ற ஆய்வுகளில் கே.இராஜனின் சங்ககால நடுகற்கள் பற்றிய கட்டுரை பல கண்டுபிடிப்புக்களுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஈழத்தின் தொல்லியல் ஆய்வாளர் ப.புஸ்பரட்ணம் அதிக ஆச்சரியப்படும்படியான தகவல்களை முன்வைத்தபோதும் சீரான தயார்படுத்தல் இன்மை குறையாகப் பட்டது. 
இக்காலம் பற்றிய கருத்துக்களில் வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ளதாகக் கூறப்பட்ட “விவசாயிகளின் கிளர்ச்சி, தம்மிடமிருந்து அரசன் பிராமணர்களின்பொருட்டுப் பறித்த நிலத்தை போராடி மீட்ட மக்களின் வீரம் (அது வேளாள நிலப்பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம்)” பற்றிய விடயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
…………………………………….

பொதுவாகவே இங்கு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெரும்பாலான ஈழத்தின் ஆய்வாளர்களும் சில இந்திய ஆய்வாளரும் விபரிப்பு முறை அல்லது விபரண ஆய்வை மேற்கொண்டமையை அவதானிக்க முடிந்தது. இது ஆய்வு என்னும் வரையறைக்குள் உள்ளடக்க விபரணத்தையும் கொண்டுவந்ததன் மிகப்பெரிய பலவீனமாகும். அதாவது, எந்தவொரு கருதுகோளும் அற்றதாக, கொள்கைப் பின்னணி அற்றநிலையில், வெறுமனே உள்ளதை உள்ளவாறே கூறுவதாக இக்கட்டுரைகள் அமைந்தன. 

அதைவிடவும் அநியாயமானதாக, ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகளினூடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை மீள ஒப்பிப்பதாகவும் சிலரது கட்டுரைகள் அமைந்தன. அதற்கு நியாயமாக, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட க.பொ.த. (உ.த) மாணவர்களுக்கு விளங்குவதற்காகவே தாம் இவ்வாறு ஆய்வை அமைத்ததாகக் கூறப்பட்டது. இது அவர்கள் உயர்தரத்திற்குக் கற்பிப்பதற்கே தகுதியானர்கள் என்னும் உண்மையை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தீர்க்கதரிசன ஆற்றலையும் அறிவிக்கின்றது. அத்தனைக்கும் அரங்கில் அதிகமாகப் பல்கலைக் கழக மாணவரையே காணமுடிந்தது. 

பாவம் அவர்கள். சான்றிதள், பதவி உயர்வுகளுக்காக ஒரு வெளியீட்டை செய்வதற்கு மாத்திரம், தேசிய மட்டத்தில் இடம்பெறும் ஆய்வரங்கில் கட்டுரை படிக்க வந்தவர்களிடம் ஆய்வை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது நம்முடைய தவறன்றி வேறில்லை.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இறந்துபோய்விடுமா இலங்கையில் தமிழ் ஆய்வு?

     “போஸ்ரர் அடிக்கவும் போராட்டம் நடத்தவும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறதா?” என்ற அரசியல்வாதியொருவரின் கேள்வி கொழும்புத் தமிழ் சங்கத்தில் ஒலித்தது. அதற்கு எனது காதுக்குள் நண்பன் ஒருவன் “பராளுமன்றத்தில் அமளிபோடவும், அடிதடி பண்ணச் சொல்லியுமா உங்களை அனுப்பியிருக்கு” என்று குசுகுசுத்தான். என்னடா ஆய்வரங்கெண்டு வந்தால், அரசியல் மேடையாயிருக்கு என்று, பின் அரசியல்வாதி போனபின் ஆய்வு நடக்குமென்று எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.  

அண்மையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த “அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்” எனும் தலைப்பிலான (ஆய்வு)அரங்கிலே ஏற்பட்ட அனுபவமே இது. 

இவ் அரங்கில் தலைப்புக்கு அப்பால், இக்கால இலங்கை அரசியல் பற்றி புஸ்பரட்ணமும், இதற்கு முந்தைய வீர யுக மக்கள் பற்றிய ராஜனின் உரைகளும் சிறப்பாயமைந்தமை குறிப்பிடத்தக்கது.

------------------------------------------
தமிழில் நவீன ஆய்வை அறிமுகப்படுத்திய பெருமை ஈழத்தவரையே சாரும். அந்த வகையில் ஆறுமுக நாவலர் தொடக்கம், சைமன் காசிச்செட்டி, சி.வை. தாமேதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வேலுப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, எம்.எ.நுஃமான் வரையானோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடிய சிலராவர். 

இப்பாரம்பரியம் இன்று மிகவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாகப் பல்வேறுபட்ட பல்கலைக்கழகமட்ட ஆய்வாளர்கள் பங்குகொண்ட தமிழ்சார்ந்த ஆய்வரங்குகளை நோக்கின்றபோது இந்த உண்மை வெளிப்படுகின்றது. இதற்கு ஆய்வரங்குகளின் அரசியல் பிரதான காரணியாக அமைகின்றது. அதாவது, இந்து சமயத்துறை இலங்கையில் தமிழ் ஆய்வரங்குகளை நடத்துவது, சி.பத்மநாதன் போன்ற தமிழியல் சாராப் பேராசிரியர்களும், சிறீப்பிரசாந்தன் போன்ற கதாப்பிரசங்கிகளும் ஒழுங்கமைப்புக் குழுக்களுள் பொறுப்புவகிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக தமிழ் ஆய்வாளர்களாக, ஆய்வென்றாலே என்னவென்றே தெரியாத சைவப்புலவர்களும், சமஸ்கிருதப் பண்டிதர்களும், கதாப்பிரசங்கிகள் சிலர் பரிணாமம் பெற்றுள்ளனர். அந்தவகையில் இவ்அரங்கில் பங்குபற்றிய வசந்தா வைத்திநாதன், எஸ்.துசியந் என்போர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். 

இவையெல்லாவற்றையும் மீறிச் சிலர் சிறந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புக்களையும் முன்வைத்தனர். அது தொடர்ந்து கூறப்படும்.

--------------------------------------------------

இவ்வாய்வரங்கின் ஆய்வாளர்கள் தெரிவு, ஆய்வுத் தலைப்புக்கள் என்பன மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக இவ்விடயப்பரப்பில் மிகவும் துறைபோனவர்களான இலங்கையைச் சேர்ந்த கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், ந.இரவீந்திரன் போன்றோருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்கௌதமன், பஞ்சாங்கம், பக்தவக்சலபாரதி போன்ற பலர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி ஒரு பேராசிரியரிடம் கேட்டதற்கு “இது பத்மனின் திருவிளையாடல்” என்னும் ஒருவரிப் பதில் கிடைத்தது. 

அறநெறிக்காலம் என்பது தமிழ்நாட்டில் வணிக வர்க்கம் மிகவும் அதிகாரத்திலிருந்த காலம் என்பது, இக்காலத்தின் அனைத்து இலக்கியங்களாலும் வலியுறுத்தப்படும் விடயம். வணிகவர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மதுரை நகரத்தில் இடம்பெற்ற மாபெரும் கலவரத்தின் கதையே சிலப்பதிகாரம். இதனால் தமிழ் இலக்கியவரலாற்றில் இக்காலத்தை “வணிக யுகம்” எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவ் அரங்கில் அக்கால வணிகம் பற்றி எதுவும் பேசப்படாததுடன், அதற்கு நியாயம் கற்பிக்க எல்லாக் காலத்திலும் வணிகம் சிறந்துதானே இருந்தது என தென்கிழக்குப் பல்கலையைச் சேர்ந்த ஒழுங்கமைப்புக்குழு உறுப்பினர், இராஜனின் சங்ககாலக் கண்டுபிடிப்புக்களை முன்வைத்ததுடன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் ஆய்வுகள் காலாவதி ஆகிவிட்டது என்னும் அபத்தமான கருத்தையும் முன்வைத்தார்.
                                                                                                                                          (தொடரும்...)

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

வன்னி மண்ணின் வாழ்வைப் பேசும் இதயராசனின் “முரண்பாடுகள்” – சிறுகதைத் தொகுப்பின்மீதான விமர்சனப் பார்வை -

“எமது கிராமங்களில் இடம்பெறும் கலையாட்டங்கள், பேய்பிடித்தல், செய்வினை, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை முற்றாக அழித்தொழிக்க வேண்டுமா? என்று கேட்டால், அதற்கு விடை பெரும்பாலும் “ஆம்” என்றே அனைவரிடமிருந்தும் வரும். ஆனால், அவற்றுக்கான காரணங்கள், பின்னணிகளைத் தெரிந்து கொள்வோமானால், இவ்வாறான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் அழிக்கப்படவேண்டிய ஆயிரம் இன்னல்களும், தீர்க்கப்படவேண்டிய ஆயிரம் முரண்பாடுகளும் எம்மத்தியில் முளைத்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். அதில் பாலியல் தேவைகள் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது நாம் பார்க்க மறுக்கும் உண்மை.” 
இந்நூலில் இடம்பெறும் ‘செய்வினை’ என்னும் சிறுகதையை வாசித்து முடித்து, எனது சமூகத்தைத் திரும்பிப்பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வின் வெளிப்பாடே இவ்வரிகள்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது நூல் வெளியீடாக, அண்மையில் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் வெளியிட்டுவைக்கப்பட்ட, ஏற்கனவே “மீறல்கள்” எனும் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கிய உலகுக்கு அறிமுகமான இதயராசனின் “முரண்பாடுகள்” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பின் மீதான ஒரு விமர்சனக் குறிப்பு.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர், மிகவும் முக்கியமான காலப்பகுதியான 70கள் தொடங்கி இன்றுவரையான, வன்னி மக்களின் வாழ்வின் ஒரு பகுதியைக் கூறும் இச்சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கம் பற்றிப் பார்க்கமுன், இதன் பௌதீக விடயங்களைப் பற்றிச் சிறிது கூறியாகவேண்டும்.
நூலின் முன்அட்டை, வரட்சியால் வற்றிப்போய் சிறிதளவு நீருடன் சேடமிழுத்துக்கொண்டிருக்கும் ஒரு குளத்தில் மாடுகள் சில உணவு தேடுகின்றன. பின்னணியில் செக்கச்செவேலென செவ்வானம் வெளிக்கிறது. பின்னட்டை, வறண்ட வயல் நிலமொன்றை விவசாயி ஒருவர் தனியனாக நின்று அடுத்த பயிர்ச்செய்கைக்காக மிகவும் நம்பிக்கையுடன் கொத்திச் சாறுகிறார். இதில் ஆசிரியரின் புகைப்படம் வழமையான ஏனைய நூல்கள் போல் மேற்புறத்தில் இடம்பெறாமல், மண்ணுக்குள் வருமாறு வைக்கப்பட்டுள்ளது. இவ் அட்டை வடிவமைப்பு சிறப்பாக அமைந்து, உள்ளடக்க விளக்கத்தைச் சிறிது தரமுற்படுவதுடன், சிவக்கின்ற வான் உள் முரண்பாடுகளுக்கான தீர்வையும் குறியீடாக முன்வைக்கிறது. உள்ளே சில இடங்களில் எழுத்துப் பிழைகள் எட்டிப்பார்ப்பதானது பௌதீக ரீதியாகத் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு பலவீனமாகும்.
எந்தவொரு கலைப்படைப்பும் முரண்பாடுகளினடியாகவே தோற்றம்பெறுகின்றது. ஏன்? எந்தவொரு சமூகச் செயலியக்கமும் ஏதாவதொரு முரண்பாட்டுடன் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் சமூக மூரண்பாடுகளைப் பற்றிய கதைகளைக்கொண்ட இத்தொகுதிக்கு முரண்பாடுகள் என்னும் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துவிடுவது கவனிக்கத்தக்கது.
வன்னி மண்ணின் வாசனையோடும், வாழ்க்கையோடும் இன்றியமையாது இணைந்திருக்கின்ற பல்வேறு நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், முரண்பாடுகள் போன்ற பண்பாட்டின் அம்சங்களை உள்ளடக்கிய பல காத்திரமான விடயங்களையும், ஒருசில சாதாரண விடயங்களையும் கூறுகின்ற 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக, உள்ளடக்கத்தின் அடிப்படையில் இச்சிறுகதைகளை,
1. யுத்தம் பற்றியும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றியும் பேசுவன
2. தனிமனிதர்களின் அல்லது சமூகத்தின் யுத்தம் தவிர்ந்த புறப் பிரச்சினைகளைப் பேசுவன
3. அகம் அல்லது உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவன
என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஜெயா, நம்பிக்கை, முரண்பாடுகள், விசகடிவைத்தியம் அகிய சிறுகதைகள் யுத்தம் பற்றியும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன. 
இனத்துவேசம் படமெடுத்தாடுகிற இன்றய சமூகச்சூழலில் மக்களுக்கு நிதானமூட்டுகிற, வரலாற்று உண்மை ஒன்றைப் பதிவுசெய்யும் கதையாக ஜெயா அமைகின்றது. இது இனக் கலவரம் ஒன்றின்போது, தமிழ்க் காடையர்களிடமிருந்து சிங்களத் தொழிலாளி ஒருவர், தமிழ் விவசாயக் குடும்பமொன்றால் காப்பாற்றப்படுவதைக் கூறுகின்றது.
நம்பிக்கை, எவரது கையையும் எதிர்பார்க்காது தமது உழைப்பில் தன்நிறைவாக வாழ்ந்த வன்னி மாந்தர்மீது யுத்தம் புரிந்த கோரத்தாண்டவம் பற்றியும், அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைப் பற்றியும், மீள்குடியேற்றம் பற்றிய வற்புறுத்தலுடன் கூறிச்செல்கின்றது. இன்றய அரசியல் சூழலில் முக்கியமானதொரு ஆவணப் பதிவாக இது அமைகின்றது. பாய்ச்சலாக அமைகின்ற இதன் கதைத் தொடர்ச்சி ஆரம்பத்தில் சிறிது சிதறுவது அவதானிக்கத்தக்கது. இதேபிரச்சினையை இன்னொரு விதமாகப் பார்க்கின்ற முரண்பாடுகள் கதையானது, மக்களைக் காக்க, மீட்கவென வந்தவர்களே மக்களைக் கொன்றொளித்தமை, மக்கள் சேவைக்கான அதிகாரிகளின் சுயநல, மக்கள் விரோதப் போக்கு போன்ற முரண் நிலைகளைப் பேசுகின்றது. 
அமைதிப்படையாக வந்து அழித்தொளிப்பின் மூலம் அமைதியை அமுல்படுத்த முனைந்த இந்திய இராணுவ காலப்பகுதியில் நிகழ்ந்த, வன்னி வாழ்வின் விபரீதமான தருணமொன்றை விபரிப்பதாக வி~கடி வைத்தியம் அமைந்துள்ளது. இது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது இடம்பெற்ற பாம்புக்கடிக்கான வைத்தியம் பற்றியதாக அமைந்துள்ளது. இதில் எடுத்துரைஞர் பாணியிலான தகவல் வெளிப்பாடு சிறுகதையின் புரிதலுக்கு உதவுகின்ற அதேநேரம், கதையோட்டத்தைச் சற்றுப் பாதிக்கின்றது.
தனிமனிதர்களின் அல்லது சமூகத்தின் யுத்தம் தவிர்ந்த புறப் பிரச்சினைகள் பற்றியவையாக, தபால், மரம்கொத்தி, தர்மபுரம், மைதானம் போன்றன காணப்படுகின்றன.
தபால் ஒரு தபாலக ஊழியரின் அக்கறையின்மையால் பாதிக்கப்படும் கற்ற இளைஞன் அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதன்மூலம் அப்பிரச்சினைக்கு சமாதானமான வளியில் தற்காலிகமாகத் தீர்வு காண்கின்றான். இதனால் இவன் இருக்கும்வரை சரியாக வேலை செய்தவர்கள் இவன் ஊரைவிட்டு புலம்பெயர முருங்கைமரம் ஏறிவிடுகின்றனர். இக்கதை தனிநபரை முன்னிறுத்தி சரியான வளியில் மேற்கொள்ளப்படாத தீர்வின் நிலையின்மையைக் கூறுகின்றது.
சினிமாப் பாணியில் தொடங்குகின்ற மரங்கொத்தி, பல்வேறு பெண்களை ஏமாற்றிச் சுகம்காணும், ஏற்கனவே திருமணம் செய்த ஆசிரியன் ஒருவனைப் பற்றியதாக அமைகின்றது. இது இன்று முக்கியமானதொரு எரிகின்ற பிரச்சினையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அக்கயவனை இனங்கண்டுகொள்ளும் இன்னொரு ஆசிரிய நண்பன், அவனுக்குத் தண்டனை கொடுக்க முனைகின்றான். இதைச் சித்திரிக்கும் “தூக்குப்போட்டுச் செத்த கன்னிப்பெண்களின் ஆத்மாவின் ஆற்றாமைக்கு லிங்கன் செயல்வடிவம் கொடுக்கப்போகிறான்.” எனும் வரி மிகவும் சக்திவாய்ந்ததாய் அமைகின்றது. 
வன்னித் தமிழர் மத்தியிலான வர்க்கப் படிநிலை பற்றிக் கூறுகின்ற கதையாக தர்மபுரம் அமைகின்றது. இது தர்மபுரத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வடபுலத்து வசதிபடைத்த வர்க்கத்தினரால் இளைக்கப்பட்ட கொடுமைகளைக் கூறுகிறது. இனவன்முறை காரணமாக தம் இனம் தம்மைக் காக்கும் என வந்தவர்க்கு நடந்த மிதிப்பு மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதில் ஆசிரியர் எடுத்துரைஞர் போன்று அங்கங்கே எட்டிப்பார்க்கிறார். கங்காணியின் காட்டிக்கொடுப்பை முறைக்கும் இளைஞர் இவ் ஏமாற்று வேலையின் எதிர்காலம் பற்றிய கருத்தை ஏற்படுத்தி விடுகின்றபோதும், ஆசிரியர் முடிவில் அது பற்றி அலசுவது தவிர்த்திருக்கக் கூடியதே.

மைதானம் ஒரு சிறிய விடயத்தைப் பற்றியதாக இருகின்றபோதும், “ஒரு நல்ல விடயத்திற்காக, பிறருக்குத் தீங்கில்லாத சட்டமுரனான ஓரு செயலைச் செய்வது பிழையில்லை” எனும் காத்திரமான செய்தியை, அனுபவத்தைத் தருகின்றது.
அகம் அல்லது உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகின்ற கதைகளாக பத்துச்சதம், செய்வினை, கனகலிங்கம், வைரவி ஆச்சி, வெள்ளைச்சி, விதைப்பு போன்றன அமைந்துள்ளன.
பத்துச்சதம் சிறுவன் ஒருவனின் அனுபவத்தினூடாகச் சிறப்பான செய்தியொன்றைச் சொல்லிச் செல்கின்றது. மோகன்தாஸ் மகாத்மாவாக எப்படி ஒரு நாடகம் வித்திட்டதோ, அதேபோன்ற சிறிய சம்பவம் ஒரு சிறுவனைச் சிந்திக்க வைக்கின்றது. சமூகத்துடனான தனிமனிதனின் தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இதைப் போன்றே சிறுவர்களின் உளவியலை மையப்படுத்தியனவாக கனகலிங்கம், விதைப்பு, வெள்ளைச்சி போன்ற கதைகள் அமைகின்றன. 
ஆசிரிய மாணவ உறவை, அதன் கனதியை, ஆசிரியனுக்கான பொறுப்பைப் பற்றிப் பகர்வனவாக கனகலிங்கமும், விதைப்பும் அமைகின்றன. இவற்றில் கனகலிங்கம், பெற்றோருக்கு அடுத்த நிலையிலும், ஆண்டவனுக்கு மேலேயும் வைத்துப் போற்றப்படும் ஆசிரியர் மாணவர் ஒவ்வொருவரையும் விளங்கிக்கொள்வதில் எடுக்கவேண்டிய அக்கறையை வலியுறுத்துவதுடன், ஒரு சிறந்த ஆசானுக்காக எதையும் செய்யத் துணியும் மாணவன் ஒருவனைக் கண்முன் கொண்டுவருகின்றது. விதைப்பு, கல்விமுறையால் சலிப்படைந்து பாடசாலையை வெறுக்கும் மாணவன் ஒருவனை, அவனுக்கு விருப்பமான துறையில் ஈடுபடுத்துவதன் மூலம் பாடசாலையையும் கல்வியையும் நேசிக்கச் செய்யும் அதிபரொருவரின் சாமர்த்தியத்தை நகைச்சுவையுடன் கூறுகின்றது. வன்னி மண்ணின் சிறுவன் ஒருவனுக்கும், வெள்ளைச்சி என்னும் பசுமாட்டுக்கும் இடையிலான உறவைப் பேசுகின்ற வெள்ளைச்சி என்னும் கதை, இன்று மிகவும் மறைந்து போய்க்கொண்டிருக்கின்ற மனிதாபிமானம், மிருகாபிமானம் என்பனவற்றின் பாதையில் செல்லும் வாழ்வைப் படம்பிடித்துள்ளது. இதில் இடையில் ஏற்படும் பாத்திரக் குழப்பமொன்று சற்று நெருடலை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
செய்வினை என்னும் கதை எமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சினையொன்றைப் பேசுவதாக அமைகின்றது. பண்பாடு, பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்படும், அடக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் உளப்பிரச்சினைகளுக்கு வடிகால்களாக அவர்கள் தேடிக்கொள்ளும் மார்க்கங்கள், அவற்றால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் என்பன பற்றிச் சொல்கின்றது. இக்கதை எம் சமுதாயத்தைப் பற்றிய கேள்வி ஒன்றை எம்முன் வீசியெறிகின்றது.
வைரவி ஆச்சி கள்ளங்கபடமற்ற, சுயமாக உழைத்துத் தன்னிறைவுடன் வாழ்ந்த மனிதரின் கதையாகவும், அழகான ஒரு வன்னி வாழ்வின் சிறப்பு, சிதைவு பற்றிச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. வைரவி ஆச்சி கணவனை இழந்து சமூக பண்பாட்டுக் கெடுபிடிகளால் தங்களைப் பைத்தியங்கள் ஆக்கிக்கொண்ட எத்தனையோ அன்னையரின் அடயாளமாகப் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவளைத் தாய்போல் பராமரிக்கும் சுற்றம் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாகின்றது.
இவைதவிர இத்தொகுப்பில் இடம்பெறும் தியாகம் என்னும் கதை காட்டுத் துவக்கால் ஒரு மனிதன் காயப்படும் நிகழ்வும், செய்யாத குற்றத்திற்காக வழக்காடி ஒருவர் தன் சொத்துக்களை இழப்பதையும் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கதைத்தொடர்பின்மை, விளக்கமின்மை, மிகவும் விரைவான முடிவு என்பன இக்கதையை வாசகரிடம் முற்றுமுழுதாகச் சேர்க்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
இதயராஜன் தனது சிறுகதைகளை இரண்டு விதமான கதைகூறும் உத்திகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். ஒன்று கதை நடக்கின்ற கால ஒழுங்கில் அவ்வாறே கூறுதல், மற்றயது இறுதிச் சம்பவத்தைத் தொட்டு, பின் முன்சென்று, இறுதியில் தொடங்கிய புள்ளிக்கு வந்து முடித்தல். இவரின் அதிகமான கதைகளில் இரண்டாவது உத்தியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது. 
வன்னிப் பிரதேச வழக்கு மொழியின் பயன்பாடு சற்று அதிகமாக இருந்திருக்குமானால், இதன் மண்வாசைன இன்னும் அதிகரித்திருக்கும். ஆனாலும், அதீத கற்பனைகள், விபரணைகள், சொல் விளையாட்டுக்களின்றி மிகவும் இலகுவாகவும், எளிமையாகவும் கதைசொல்லும் சிறப்பு பாராட்டப்படவேண்டியதே.

அதிகாரத்தின் அடக்குமுறை

அதிகாரத்தின் அடக்குமுறை
ஊடகங்களில் உரைக்கமுடியா
உண்மைகளாகவும்!
பராயமடைந்த சுயநினைவுள்ளோரின்
காணாமல் போதல்களாகவும்!
கள்ளமற்றோரின் கைதுகளாகவும்!
குற்றவாளிகளின் சுதந்திர வானமாயும்!
அப்பாவிகளுக்கான புனர்வாழ்வாகவும்!
அடிதெரியாத அழித்தொளிப்புகளாகவும்!
இனந்தெரியாதோரின் கடத்தல்
கொலைகளாகவும்!
வேள்ளைவான்களாகச் சிலநேரங்களில்
இனங்காணப்பட்டும்!
இன்னும் தொடர்கிறது…..
இதில் பெரிய அதிகாரமும் - அதன்
ஆசிர்வாதத்துடன் சின்ன அதிகாரமும்
குடும்பமாகக் குலம்வாழச் சேர்க்கிறார்
இவற்றையெல்லாம் இடித்துச் சொன்னேன்
இறைவன் நின்று அறுப்பானாம்?

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஈழத்து திரைப்பட வரலாற்றின் தொடர்ச்சி அறுந்து விடவில்லை


ஈழத்து திரைப்பட வரலாற்றின் தொடர்ச்சி அறுந்து விடவில்லை


(புலம்பெயர் சூழலில் ஏற்படும் உறவுகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பேசும் திவ்வியராஜனின் “உறவு” திரைப்படம் பற்றிய அனுபவப் பகிர்வு)



இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புலம்பெயர் தமிழரின் தயாரிப்பு இயக்கத்தில் உருவான முழுநீளத் திரைப்படமொன்று முதன்முதலாகத் திரையிடப்பட்டது. இதைப்பார்த்த பல்கலைக்கழக மாணவி ஒருத்தி உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய “இது ஈகோ பிடித்த ஆண்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட அடி” எனும் கருத்து என் காதில் இப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே புலம்பெயர் வாழ்வில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய “சகா” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நன்கு அறிமுகமானவரும், ஈழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான திவ்வியராஜனின் அடுத்த திரைப்பிரசவமான “உறவு” என்னும் திரைப்படம் பற்றிய அனுபவப் பகிர்வாக இக்குறிப்பு வரையப்படுகின்றது.

இத்திரைப்படமானது தமிழர்கள் பாரிய அளவில் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டுச் சூழலைக் களமாகக் கொண்டு, குடும்ப உறவில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற ஈகோ, சந்தேகம் என்பவற்றினால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிப் பேசுகின்றது. இப்பிரச்சினையானது மரபுவளிப்பட்ட, பிற்போக்கான, ஆணாதிக்கச் சிந்தனை வயப்பட்ட சமூகத்தில் நீறுபூத்த நெருப்பாகவும், நவீனமயமான சமுதாயத்தில் வெளிப்படை மோதலாகவும், கணவன்-மனைவி உறவுகளுக்கிடையிலான உலகப் போதுவான முரண்பாடாக விளங்குகின்றமை கண்கூடு. அவ்வாறானதொரு கருவை மிகவும் சிறப்பாக புலம்பெயர் தமிழரின் வாழ்க்கைப்பின்புலத்தில் திவ்வியராஜன் தீட்டித் தந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றில் பிறந்து வளர்ந்த, அரசாங்கத்தில் கணக்காளராக உயர் உத்தியோகம் பார்க்கும் முப்பது வயதைத் தாண்டிய இளைஞன், இங்கு இனந்தெரியாதவர்களால் ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் வசிக்கும் சொந்த மச்சாளை மணம் முடித்துக் கனடா செல்கின்றான். பரத நாட்டியத்தை உயிராக நேசிக்கும் கலைக்குடும்ப வாரிசான, ஆய்வுகூடம் ஒன்றில் பணியாற்றும் கதாநாயகி, கணவனைக் கவனிப்பதுடன் தனது கலைச் செயற்பாடுகளிலும் அதிக அக்கறையுடன் ஈடுபடுகின்றாள். ஊரில் உயர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்த நாயகனுக்கு வேலையின்றித் தனிமையில் இருப்பதும், தன் தகுதிக்குச் சற்றும் பொருத்தமற்ற வேலைகளுக்காக அலைந்து களைப்பதும் விரக்தியை ஏற்படுத்துகின்றது. அவனுடன் கூடவே வந்த கிரமத்துப் பிற்போக்குச் சிந்தனையும், சில தகா நண்பர் கூட்டும் அவனுக்குச் சந்தேகப் பேய் பிடிக்கச் செய்கிறது. அதனால் முற்கோபியான அவன், மாமன் மாமியுடன் முரண்பட்டுக்கொண்டு, மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பன் ஒருவனின் வீட்டின் மேல் மாடிக்கு தனிக்குடித்தனம் வருகிறான். கலைக் குடும்பமொன்று சிதைந்து போகின்றது. நாயகியும் கணவனுக்காக நாட்டியக் கலைக்கு சிறிது ஓய்வு கொடுக்கிறாள். இவ்வேளை நாயகனுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையொன்று கிடைத்துவிட, அவன் நாயகியின் வேலையை விடுமாறு வற்புறுத்துகிறான். அதற்கு அவள் சம்மதிக்காது விட, இன்னும் முற்றும் முரண்பாடு ஒருநாள் சண்டையாகி முடிகிறது. இதை அவதானித்த அயல்வீட்டுப் பெண்மணி பொலிசுக்கு அறிவித்துவிடுகிறாள். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் மனைவிதான் தன்னைப் பொலிசில் பிடித்துக் கொடுத்ததாகக் கருதும் அவன் தனியாக ஒரு அறையிலே வாழ்கின்றான். மனைவியும், பெற்றோரும், மாமன் மாமியும் எவ்வளவு ஆலொசனைகளை வழங்கினாலும் செவிமடுக்காத நாயகன் ஒருநாள் நாயகியுடன் நேரடி விவாதத்தில் ஈடுபடுகிறான். இதில் அவன் மனம்மாறினானா? அவள் தன்னை மாற்றிக்கொண்டாளா? என்னும் கேள்விகளுக்கான விடையுடன் திரைப்படம் முடிகின்றது.


அதி விசேட ஆற்றலுள்ள கதாநாயகத்தனம் அற்ற, துன்பம் கண்டு துவண்டுபோகும், நம்மைப்போன்ற சாதாரண மனிதர் திரையில் உலவுவதும், நாம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினை அதில் பேசப்படுவதும், நமது பிரச்சினையை நாம்தான் தீர்க்கவேண்டும் என்னும் உண்மை வலியுறுத்தப்படுவதும் இக்கதையின் குறிப்பிடத்தக்க சிறப்புகளாகும்.

உரையாடல்களில் பிரதேசப் பேச்சுவழக்கு மொழி பாத்திரங்களின் சமூக அந்தஸ்த்துக்கேற்ப வேறுபட்டும் மிகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையின் பேச்சுவழக்கைச் சிறப்பாக வெளிப்படுத்திய முதலாவது முழு நீளத்திரைப்படமாக உறவு முத்திரை பதித்து நிற்கிறது.

பரத நாட்டியத்தின் ஆட்சி இத்திரைப்படம் முழுவதும் வியாபித்துள்ளது. திருமணக்காட்சி, மகிழ்ச்சி, இறுதிக்கட்ட சோகம், கோபம் என்பனவற்றின் வெளிப்பட்டிற்கு அது சிறப்பாக உதவியுள்ளது. இசை தேவையானபோது மிகவும் சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளபோதும், சில இறுதிக் காட்சிகளில் உரையாடலை விடவும் மேலோங்கப் பார்ப்பதைக் காணலாம். பாடல்கள் சற்று தேவைக்கதிகமாக இடம்பெற்றிருப்பினும், பாரதி பாடல்களை இயக்குனர் மிகச்சிறப்பாக உபயோகித்துள்ளார். பெண்மையின் பெருமை கூறும் ஆரம்ப சக்தி பற்றிய பாடல் மிகவும் பொருத்தமாக அமைவதும், இறுதிப்பாடல் இன்றியமையாமல் அமைந்து படத்தின் உணர்வு வெளிப்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக அமைவது குறிப்பிடத்தக்கது. இவ் இறுதிப்பாடலுக்கான காட்சிப்படுத்தல் மிகவும் கவர்வதாக அமைவதும் பாராட்டத்தக்கது. அது படத்தை நிறைவானதாக்குகின்றது.


இதன் கதை எங்களிடையிலான புரையோடிப்போன முரண்பட்ட கருத்துக்களையும், செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. சாதகப் பொருத்தம் பார்த்தல், (எல்லாப் பொருத்தங்களும் பொருந்திவரும், முக்கியமாகப் பொருந்தவேண்டிய மனப்பொருத்தம் மட்டும் பொருந்தாமல் போய் மணமுறிவு வரை சென்றுவிடும் முரணிலை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.) அத்துடன், கலைகளைப் பூசித்துக் கொண்டு கலைஞர்களைத் தூசித்தல் என்பன சில எடுத்துக்காட்டுக்கள்.

திரைப்படம் பார்த்து முடித்த ஒரு பெரியவர் சொன்னார் “திவ்வியராஜன் சினிமாவை கையகப்படுத்துவதில் வெற்றிகண்டுவிட்டார்” என்று. சமுதாயத்திற்கான சினிமாவை அவர் இன்னுமின்னும் படைக்க வேண்டும். ஈழத்து திரைப்பட வரலாற்றின் தொடர்ச்சி அறுந்து விடவில்லை இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமான காத்திரமான படைப்புக்களாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை அறியும்போது மனம் குளிர்வதுடன், எதிர்கால சந்ததிக்கு திரைப்படத் துறையில் வளிகாட்ட எம்மவர் படைப்புக்களும் இருக்கின்றன என்னும் உண்மை நிறைவைத் தருகின்றது.

திங்கள், 24 மே, 2010

‘அங்காடித்தெரு’ பற்றியதொரு குறிப்பு

அங்காடித்தெரு கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைக் கீறிட்டுக் காட்டிய படம். தமிழ்ச் சினிமாவை மாயை வளையத்துள்ளிருந்து மீட்டெடுக்கும் முயற்சியின் முக்கியமானதொரு படிக்கல். இயந்திர மயமான சுயநல வாழ்வுக்குள் சுழன்றுகொண்டிருக்கும் மத்தியதர மனிதனின் கண்ணில் விழுந்த தீப்பொறி, மேல்தட்டு வர்க்கத்தின் மனச்சாட்சியை உலுக்கும் பொழுதுபோக்கு. மனித வாழ்வின் மறுபக்கத்தைக் காட்டும் மாபெரும் கலைப்படைப்பு. சிந்தனைக்கான சினிமா. மனிதம் மறைந்த இந்த உலகின் விம்பம் காட்டும் கண்ணீர்த்துளி. நகரத்து மனிதனின் நாகரீக வாழ்வு ஒளிர்வுக்குப் பின்னால் உருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு மனிதனின் நித்திய போராட்டம்.
அண்மித்த இரு தசாப்தங்களுள் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சேது, பிதாமகன், நான் கடவுள், ராம், பருத்திவீரன், ராமன் தேடிய சீதை, சுப்பிறமணியபுரம், வெயில் போன்றன, பெரும்பான்மையாக உள்ள சாதாரண மனிதரிலிருந்து மாறுபட்ட வாழ்வினை வாழ்ந்த மனிதரின், இதுவரை பார்க்கப்பாடாத உலகை எமக்குக் காட்டின. ஆனால், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, கல்லூரி, மாயக் கண்ணாடி போன்றன பெரும்பான்மையாக உள்ள சாதாரண மனிதரின் வாழ்க்கையை, அவர்களில் அதிகமானோர் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளைப் பற்றியனவாக அமைந்துள்ளன. இந்த இரண்டாவது வரிரையில் வந்த புதிய வாழ்வே அண்மைய அங்காடித்தெரு.
இதுவரை சிறுகதை, நாவல் போன்ற புனைகதை இலக்கிங்களிலும், ஒருசில குறும்படங்களிலும் கூறப்பட்ட யதார்த்த வாழ்வு இன்றுதான் முற்று முழுதாக, அப்படியே வெள்ளித் திரையில் வெளிப்படத் தொடங்கியுள்ளது (மிக மிகக் குறைவான சினிமாத் தனங்களுடன்). புதுமைப்பித்தனின் பார்வை இப்புத்தாயிரமாம் ஆண்டில், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின் பிறிதொரு வெகுஜன ஊடகத்தில் வெளிப்பட்டு நிற்கின்றமை வரவேற்கத் தக்கது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

வர்க்கமுறை பற்றிய மார்க்சியக் கருத்துக்கள்

வர்க்கமுறை தொடர்பான கருத்தோட்டமானது மார்க்சிற்கு முன்னரே முன்வைக்கப் பட்டிருப்பினும், வர்க்கமுறை பற்றிய விரிவான கருத்துக்களை முதன்முதலில் முன்வைத்தோர் பொதுவுடமை வாதிகளான கார்ள் மாக்ஸ், ஏங்கெல்ஸ் போன்றோரேயாவர். இவர்கள் வர்க்கங்கள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வர்க்கமுறையின் வரலாற்றையும், அதன் எதிர்காலத்தையும் பற்றிய கருத்துக்களையும் ஆணித்தரமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே முன்வைத்தனர். இக்கருத்துக்கள் இன்றுவரை அறிஞர் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

மார்க்சிஸம் பற்றிய அறிமுகம்
பொதுவுடைமை, அல்லது சம உடைமைச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் கார்ள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சோசலிஸச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு விஞ்ஞானம் அல்லது அறிவியல்ச் சிந்தனையே ‘மார்க்ஸிசம்’ (ஆயசஒளைஅ) ஆகும். இதற்கு வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் என்பனவற்றை உள்ளடக்கிய பொருள் முதல் வாதக் கோட்பாடு அடிப்படையாக அமைந்தது.
இன்றய மனித சமுதாயத்திலே நிலவுகின்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளி – தொழிலாளி எனும் வர்க்கப் பாகுபாட்டினையும், அதில் ஒரு சிறு குழுவான முதலாளி வர்க்கமானது, உலகின் ஏனைய அனைத்து மக்களையும் ஏமாற்றிச் சுரண்டித் தாம் சுகபோகமாக வாழ்கின்ற நிலையினையும், மாற்றியமைக்கப் புறப்பட்டவர்களே மார்க்சிய வாதிகளாவர். இவர்கள் சம உடைமைச் சமுதாயத்தினைப் படைப்பதற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தினை அதிகாரமுடையதாக்குவதற்கும், உலக வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் போராடி வருகின்றனர்.
இந்த வகையிலே உலகின் மனிதகுலத்திற்கும், அதன் நிலையான வழ்க்கைக்கும் சாதகமான விடயங்களை எல்லாம் மார்க்சிசமானது ஏற்றுக்கொள்கின்றது.
வர்க்கமுறையும் மார்க்சிஸமும்
‘ஊடயளளளை’ என்கின்ற லத்தீன் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதே ‘ஊடயளள’(வர்க்கம்) எனும் ஆங்கிலப் பதமாகும். இச்சொல்லானது ஆரம்பத்தில் ‘ஆயுதமேந்துவதற்காக அழைக்கப்பட்ட குழு’ எனப் பொருள்கொள்ளப்பட்டாலும், காலப்போக்கில் ‘மக்கள் பிரிவைச்’ சுட்டுவதற்குப் பயன்பட்டது.
வர்க்கமுறையானது உலகில் பல நூற்றாண்டுகளிற்கு முன்னரேயே தோற்றம் பெற்றுவிட்டதொன்றாகும். கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் ரோமானிய மன்னனான செர்வியூஸ் துல்லியூஸ் என்பவனே முதன்முதலில் தனது நாட்டு மக்களை வர்க்கங்களாகப் பாகுபடுத்தினான் என்பர். இது யுத்தத் தேவைகளிற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
இதன் பின்னர் வர்க்கமுறை தொடர்பான கருத்துக்கள் பல்வேறு நிலைகளில் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால் இன்று வர்க்கமுறை தொடர்பான கருத்துக்களிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, அதனை வலியுறுத்திக் கூறுபவர்களாக மார்க்ஸிய வாதிகள் விளங்குகின்றார்கள். பொருளாதாரத்தின் அடிப்படையில் மனித சமூகமானது இரண்டு மாபெரும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது எனக் கூறும் இவர்கள், அவை இரண்டையும் தொழிலாளி வர்க்கம் - முதலாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் - பூர்ஸ்வா வர்க்கம் அல்லது மேல்த்தட்டு வர்க்கம் - கீழ்த்தட்டு வர்க்கம் எனும் சொற்களால் குறிப்பிடுகின்றனர்.
இவ் வர்க்கத்தினை மார்க்சிய அறிஞரும், முதன்முதலில் மார்க்சியக் கருத்துக்களை நடைமுறையில் வெற்றிகரமாக அமுல்படுத்தியவருமான லெனின் பின்வருமாறு வரையறை செய்கின்றார்,
“வர்க்கங்கள் என்பவை, வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில், அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப் பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதினமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும்.”
இதில் அவர் வர்க்கங்களைப் பாகுபடுத்திக்காட்டும் பிரதான அடிப்படைகளாக நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அவையாவன,
1. வரலாற்று பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட சமுதாய உற்பத்தி அமைப்பில் மனிதர்கள் வகிக்கும் இடம்:
அதாவது, சமுதாயத்தில் இடம்பெறுகின்ற உற்பத்திச் செயற்பாட்டில் மனிதர்கள் எந்தப் பாத்திரத்தினை ஏற்கிறார்கள் என்பதாவது, இவர்கள் தங்களது உழைப்புச் சக்தியைக் கூலிக்காக விற்கின்ற தொழிலாளர்களா, அல்லது தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்துவிட்டு ஏனையோரின் உழைப்பினைச் சுரண்டி வாழ்கின்ற முதலாளிகளா என்பதனைக் கருத்தில் கொள்கின்றது.

2. உற்பத்திச் சாதனங்களுடன் மனிதர்கள் கொண்டுள்ள உறவு:
இது உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற மனிதர்கள் அதில் சம்பந்தப்படுகின்ற ஏனைய உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் மீது எத்தகைய உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதனை, அதாவது, மூலப்பொருள் (தொழிற்சாலை, உற்பத்திக் கருவிகள்), மற்றும் முடிபுப் பொருட்கள் (நுகர்வுக்குரிய உற்பத்திசெய்யப்பட்ட பண்டம்) என்பவற்றிற்கு இவர்கள் உரிமையுடையவர்களா அல்லது அவற்றின்மீது எத்தகைய உரிமையுமற்ற வெறும் உழைப்பாளர்கள் மாத்திரம் தானா என்பதனைக் கருத்தில் கொள்கின்றது.

3. உழைப்பின் சமுதாய ஒழுங்கமைப்பில் மனிதர்களின் வகிபங்கு:
இது மனிதர்கள் உழைப்புச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களா அல்லது எந்தவொரு உழைப்புச் செயற்பாட்டிலும் ஈடுபடாது ஏனையோரின் உழைப்பை உறிஞ்சி வாழ்கின்றார்களா என்பதனைக் கவனத்தில் கொள்கின்றது.
4. சமுதாயச் செல்வத்தில் இவர்கள் பெறுகின்ற பங்கு, அதைப் பெறுகின்ற முறை.
வர்க்க வேறுபாட்டைத் தீரமானிப்பதில் பிரதான செல்வாக்குச் செலுத்துகின்ற இன்னொரு காரணி தனிச்சொத்துடமை ஆகும். இதில் ஒருவருடைய சொத்தின் அளவும், ஏனையோருடைய சொத்திற்கும் அதற்குமிடையிலான வேறுபாடும், அவர் அந்தச் சொத்தினைப் பெற்றுக்கொள்கின்ற முறையுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இதில் பொதுச் செல்வம் சுவீகரிக்கப்படும் முறை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஒரு தனிமனிதனுடைய வாழ்விலே அவன் சார்ந்திருக்கும் வர்க்கம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. தனிமனித சுதந்திரமானது முற்றிலுமாக அவன் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்திலேயே தங்கியுள்ளது. அத்துடன் அவனுடைய பண்பாடும் அதாவது வாழ்க்கைமுறை, (நடை, உடை, உணவு, தங்குமிடம்) கல்வி அறிவு, மொழி, சமயம், ஒழுக்கம், விழுமியங்கள், சட்டம், தண்டனை என்பன யாவும் அவனது வர்க்கத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்கள்

வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்களை நாம் இரண்டு அடிப்படைகளில் நோக்க முடியும். அவையாவன,
1. மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கம் பற்றிய சிந்தனை பெறும் முக்கியத்துவம்.
2. சமுதாய வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்து.
மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கம் பற்றிய சிந்தனை பெறும் முக்கியத்துவம்.
மானிட வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலில், வர்க்கத்தின் வகிபங்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஆராயப் புகுவோமானால், கம்யூனிஸ்ற் கட்சியின் பிறப்புச்சான்றிதழ் எனச்சிறப்பிக்கப்படும் கம்யூனிஸ்ற் கட்சி அறிக்கையின் முதல் வரியே அதனைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றது.
“இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போரராட்டங்களின் வரலாறே ஆகும்.”
அதாவது உலக வரலாறானது வர்க்கங்களிற்கிடையில் நிலவிவந்த முரண்பாட்டின் காரணமாகவே வௌ;வேறு பரிணாமங்களை அடைந்து வழர்ச்சியடைந்து வந்துள்ளது. எனக் கூறிய மார்க்சும் ஏங்கெல்சும் மேலும்,
“ஒடுக்குவோரும் - ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், சில நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் இடையறாத போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.”
எனும் தகவலையும் வளங்கிச் சென்றுள்ளனர். அத்துடன், வரலாற்றில் இடம்பெற்ற பெரும்பாலான யுத்தங்களிற்கு நேரடியான காரணமாகவோ அல்லது மறைமுகமான காரணமாகவோ வர்க்கமுரண்பாடு இருந்துள்ளது என்பதனை வரலாற்றுத் தரவுகளில் இருந்தும் அறியக்கூடியதாக உள்ளது. இது மேற்சொன்ன கூற்றிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் அமைகின்றது.
அத்துடன் மார்க்ஸிசக் கருத்தியலிற்கு அடிப்படையாக அமைகின்ற பொருள்முதல்வாதச் சிந்தனையிலும், வர்க்க முரண்பாடு தொடர்பான கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
சமுதாய வர்க்கப் பாகுபாட்டின் வரலாறு தொடர்பான மார்க்ஸிசக் கருத்து.
வரலாற்றுக் காலங்களில் வர்க்கப் பாகுபாடு எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பது தொடர்பான மார்க்ஸிசக் கருத்தியலை ஆராயப் புகுவோமானால்,
வரலாற்றிலே வர்க்கப்பிரிவினையானது எப்போது? ஏவ்வாறு? தோன்றி வளர்ச்சியடைந்தது என நோக்கினோமானால், என்று மனிதனுக்குச் சொத்தின் மீது மோகம் ஏற்பட்டதோ! அன்றே வர்க்க வேறுபாட்டிற்கான முதல்வித்து இடப்பட்டு விட்டது எனலாம்.
ஆதிகாலத்தில் குலக்குழுக்களாக வாழ்ந்த மக்களிடத்தில் இப்பிரிவுகள் காணப்படவில்லை, அது வர்க்கங்கள் அற்றதான ஒரு சமத்துவ சமுதாயமாகக் காணப்பட்டுள்ளது. அக்காலமக்களுக்கு அடிமைப்படுத்துதல், ஒடுக்குமுறை, சுரண்டல் போன்ற எதுவும் தெரியாது. அவர்கள் தாம் உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கூட்டு முயற்சியின் மூலம் பெற்று, கூட்டாகவே அவற்றைப் பகிர்ந்து, பயன்படுத்தி வழ்ந்தார்கள். இது தாய்வளிச் சமுதாயமாக இருந்தது. பெண்ணுக்கு முதன்மையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள், அதாவது அறிவியல் ரீதியான சிந்தனை வளர்ச்சி, சில கண்டுபிடிப்புக்கள், தனிச்சொத்துடமை, அதுதொடர்பான பாதுகாப்புப் பிரச்சினைகள், அரசுகளின் தோற்றம் என்பன மனித சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றத்திற்கு வித்திட்டன எனலாம்.
அந்தவகையில் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது, உழைப்புப் பிரிவினையே ஆகும். அதுவே மனித சமூகம் பெரிய சமுதாயக் குழுக்களாகவும், பகைமை வர்க்கங்களாகவும் பிளவு படுவதற்கு பிரதான அடிப்படைக் காரணமாக அமைந்தது.
உலக வரலாற்றிலே இடம்பெற்ற பிரதான சமுதாய உழைப்புப் பிரிவினைகளாக,
 கால்நடை வழர்ப்போர் தனி இனமாக ஏனையோரிலிருந்து பிரிந்தமை.
(இதுவே பண்டமாற்று முறையின் அறிமுகத்திற்குக் காரணமாகியது)
 விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிந்தமை.
 உடல் உழைப்பும், மூளை உழைப்பும் தனித்தனியாகப் பிரிந்தமை.
என்பன குறிப்பிடப்படுகின்றன.
வர்க்கங்கள் தோன்றிய காலப்பகுதியைப் பின்வருமாறு வரையறை செய்வர்,
இடம் காலம்
01. பண்டைய எகிப்து, அசிரியா, பாபிலோனியா
கி.மு. 4 000 ஆண்டுகளின் இறுதியிலும், கி.மு. 3 000 ஆண்டுகளின் தொடக்கத்திலும்
02. பண்டைய இந்தியா, சீனா கி.மு. 3 000, 2 000 ஆண்டுகளில்
03. பண்டைய கிரீஸ், ரோமாபுரி கி.மு. 1 000 ஆண்டுகளில்
இவ் வர்க்கப்பாகுபாடனது காலத்திற்குக் காலம் எத்தகைய வடிவங்களில் நிலவி வந்துள்ளது என நோக்கினால்,
 அடிமைகள் - ஆண்டான் (அடிமைகளை உடமையாகக் கொண்டோன்)
 விவசாயி – நிலப்பிரபு (நிலத்திற்குச் சொந்தக்காரன்)
 தொழிலளி – முதலாளி (முதல், உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரன்)
புராதன நாகரீகங்கள் (எகிப்து, சீனா, சுமேரிய நாகரீகங்கள்) தோற்றம் பெற்ற காலப்பகுதியில் நிலவிய சமுதாயமானது “அடிமை - ஆண்டான்” முறைச் சமுதாயமாகவே இருந்துள்ளது. அடிமைகளாகப் பெரும்பாலும் போர்க்கைதிகளும், சிறுபான்மையாக வாங்கிய கடனைக் கட்டாதோரும், குற்றமிழைத்தோரும், வறியவர்களும் விளங்கினர். இவர்களைப் பயன்படுத்தி மாபெரும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. இவர்கள் மந்தைகளைவிடவும் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.
இவ் “அடிமை - ஆண்டான்” முறைச் சமுதாயத்தின் தொடர்ச்சியான வழர்ச்சியாகவே, நிலப்பிரபுத்துவ சமூகமானது காணப்படுகின்றது. இதில் நிலத்திற்குச் சொந்தக்காரன் (நில உடைமையாளன்) ஆண்டானாகவும், ஏனையவர்கள் அவனில்த் தங்கி வாழ்பவர்களாகவும் விளங்கினர். இத்தங்கி வாழ்பவர்களில் ஒரு பகுதியினர் அடிமைகளாகவும், இன்னொரு பகுதியினர் விவசாயத்தின் போது விவசாயிகளாகவும், யுத்தத்தின் போது போர்வீரர்களாகவும், ஏனைய நேரங்களில் மாத்திரம் கொஞ்சம் சுயமாக இயங்குகின்ற சுதந்திரமுடையவர்களாகவும் இருந்தனர். இங்கு அடிமைகளிற்கு எவ்விதமான உரிமைகளும் வழங்கப்படவில்லை. இவர்களைக் கூவி விற்கின்ற சந்தைகள் மத்தியகாலப்பகுதியில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருந்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாகத் தோற்றம்பெற்றதே தற்கால முதலாளித்துவ சமுதாயமாகும். இது நிலப்பிரபுத்துவத்தினைத் தகர்த்ததன் மூலமே தோற்றம் பெற்றது. ஆனால் இது அதனிலும் மோசமான தொழிலளி – முதலாளி என்ற வர்க்கப் பிரிவினையைத் தொற்றுவித்துள்ளது. இதன் சிறப்பியல்பு என்னவெனில் வர்க்கப் பகைமைகளைச் சுருக்கி எளிமையாக்கியுள்ளமையே ஆகும்.
முதலாளித்துவ சமுதாயத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களாவன, நாடுகாண் பயணங்கள், வணிகத்திற்கான முக்கியத்துவம், பணப்புளக்கம் அதிகரித்தமை, காலணியாதிக்கம், கைத்தொழில் புரட்சி, விஞ்ஞானத்தின் வேகமான வளர்ச்சி என்பனவேயாகும். இன்று நவகாலணித்துவம், உலகமயமாதல், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வழர்ச்சி என்பன முதலாளித்துவத்தின் விளைவுகளாக இருக்கின்ற அதேநேரம் அதனை மேலும் வளர்த்து விடுகின்றன.
முதலாளித்துவ சமுதாயத்தை ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாக, ஓயாது உற்பத்தியில் ஏற்பட்டுவரும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகளிற்கிடையில் இடையறாது ஏற்படுகின்ற முரண்பாடுகளும், பிரச்சினைகளும், யுத்தங்களும், அமைதிக்குலைவும், முடிவேயில்லாத நிச்சயமற்ற நிலமையும், கொந்தளிப்புக்களும் விளங்குகின்றன.
இதற்கு அடுத்தபடிநிலையாக மீண்டும் பொதுவுடமைச்சமுதாயம் தோன்றும் என்பதே மார்க்சியவாதிகளின் எதிர்பார்ப்பு ஆகும். இது தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் வெற்றியின் ஊடாக நடைமுறைக்கு வரும் என்பர். இப்புரட்சியானது சர்வதேச ரீதியாக இடம்பெறும். ஆனால், ஒவ்வோரு நாட்டினதும், பிரதேசத்தினதும் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிபட்படைகளிற்கேற்ப இது இடம்பெறும் காலமானது வேறுபடும் என்கின்றனர்.
அந்தவகையிலே மனித சமுதாயத்திலே காலங்காலமாகப் பல்வேறுபட்ட வடிவங்களில் இருந்து வருகின்ற வர்க்க வேறுபாட்டின், பிரதானமான இரண்டு பிரிவுகளாக அமைவனவாகிய
தொழிலளர் வர்க்கம்
முதலாளி வர்க்கம் என்பன தொடர்பாகச் சற்று விரிவாக நோக்குவோமானால்,
தொழிலாளர் வர்க்கம்
தொழிலாளர் வர்க்கம் என்பது “பிறருக்காக உழைக்கும் மனிதர்களை உள்ளடக்கியது ஆகும்.” அதாவது, இவர்கள் கூலியின் பொருட்டுத் தமது உழைப்பை வழங்குவர், இவ் உழைப்பானது உடலுழைப்பாகவோ, அல்லது மூளை உழைப்பாகவோ அமைந்திருக்கும்.
அதாவது உழைக்கும் மக்கள் எனும் சொற்றொடரானது, “தமது உழைக்கும் திறனை முதலாளிகளிற்கு விற்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் மக்களைக் குறித்து நிற்கின்றது” என்பர். இவர்கள் தாம் எவ்வளவு இலாபத்தினை முதலாளிகளிற்குப் பெற்றுக்கொடுக்கின்றோம் என்பது தொடர்பான எந்தவொரு அக்கறையுமின்றி, நிர்ணயிக்கப்பட்டதொரு ஊதியத்தின் பொருட்டு அவர்களிற்காக வேலை செய்கின்றனர்.
ஆனால் சிலர் ஊதியம் மற்றும் சொத்துடமையின் அடிப்படையில் வர்க்கவேறுபாட்டைத் தீர்மானிக்க முனையும் போது, உயர்மத்தியதர வர்க்கத்தினைத் தொழிலாளர்களாகக் கொள்ளலாமா? எனும் கேள்வியும், சிறுமுதலாளிகளை எவ் வகுப்பினுள் அடக்குவது? எனும் கேள்வியும் எழுந்து சர்ச்சையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் உயர்மத்தியதர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் சம்பளத்தின் பொருட்டுத் தமது உழைப்பை வழங்குபவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு முதலாளியின் கீழ் சேவகம் செய்பவர்கள் என்ற அடிப்படையிலும் தொழிலாளர் வர்க்கத்தினைச் சேர்ந்தோராகவும், சிறுமுதலாளிகள் முதலையும், கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டிருப்பதனால் முதலாளி வர்க்கத்தினைச் சேர்ந்தோராகவும் முன்சொன்ன வரைவிலக்கணத்தின்படி கொள்ளப்படுதலே பொருத்தமானதாக அமைகின்றது.
இவ்வாறாகத் தொழிலாளர்களைப் பிரிப்பது அதாவது மத்தியதர வர்க்கம் எனவும், கீழ் உழைப்புத் தொழிலாளர்கள் எனவும் பிரித்து வைத்திருப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினது புரட்சிகரச் சக்தியை தகர்த்தெறிவதற்கான முதலாளித்துவத்தின் சதித்திட்டம் என்பது மார்க்சியவாதிகளின் கருத்தாகும்.
இன்றைய உலகில் நிலவுகின்ற வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது, தொழிலாளர் மத்தியில் வேலை தொடர்பான அச்சத்தினை ஏற்படுத்தி, அவர்களை முதலாளிகளிற்கு மேலும் மேலும் அடிமைகளாக, உரிமைகளிற்காகப் போராட முடியாதவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.
இவர்கள் தம் ஆயுளின் பெரும்பகுதியைக் களிக்கின்ற, தாம் வேலை செய்கின்ற கட்டடம் தமக்குச் சொந்தமானது அல்ல என்பதனை அறிந்தவர்களாகவும், தாம் வேலை செய்கின்ற இயந்திரத்தில் தமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெரிந்தவர்களாகவும், தாம் உற்பத்திசெய்கின்ற சில பொருட்களைத் கொள்வனவு செய்ய வசதியற்றவர்களாகவும் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒரு சில வேலைகளையே மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகச் செய்துவருவதால், வேலையின் மீது விரக்தியடைந்த நிலையிலும், வாழ்க்கையில் இருந்து அந்நியமானநிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இதே தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட்டு நிற்கும்போது, அனைத்திற்கும் மேலான மாபெரும் பலத்தினைக் கொண்டதாகவும், சமுதாயப் படைப்புத்திறனைக் கொண்டதாகவும், சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய சக்தி கொண்டதாகவும் விளங்குகின்றது. மாபெரும் சமூகமாற்றக் காலங்களில் இத் தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர மாற்றத்தின் சிருஸ்டியாகத் தனது வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றிவிடுகின்றது என்பதனை, நாம் உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் புரட்சிகளான ரஸ்யப் புரட்சியின் போதும், சீனப் புரட்சியின்போதும், கியூபப் புரட்சியின்போதும், அண்மைய நேபாள புரட்சியின்போதும் அது சாதித்தவற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
முதலாளி வர்க்கம்
உற்பத்திச் சாதனங்களைத் தம் உடமையாகக் கொண்டு, ஏனைய பலரை வேலைக்கமர்த்தி, இலாபத்தினைப் பெற்றுக்கொள்கின்றவர்களைக் கொண்டிருக்கின்ற வர்க்கமே முதலாளி வர்க்கம் ஆகும்.
முதலாழித்துவ சமுதாயத்தில் அரசானது சுரண்டல்க்காரர்களின் ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே விளங்குகின்றது. இவ் ஆதிக்கத்தின் ஒரு வகைப்பாடே ஜனநாயகம் ஆகும். அரசு தவிர மதம், சட்டம் என்பனவும் இச்செயற்பாட்டையே புரிகின்றன.
முதலாளித்துவம் தனது பாரிய சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் புவிப்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகின்றது. அதற்கு எதிரான சக்திகளை அது அழித்துவிடவும் தயங்குவதில்லை. அதற்காகக் கிராமங்களை நகரங்களின் ஆளுகைக்கு உட்படுத்துகின்றது, மாபெரும் நகரங்களை உதித்தௌச் செய்கின்றது, நகரங்களின் சனத்தொகையை வெகமாக அதிகரிக்கச் செய்கின்றது.
இது மனிதனுடைய மாபெரும் சக்தியை வெளிப்படுத்தியது. பாரிய கட்டுமானங்களைத் தன் தேவையின் பொருட்டு அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் உருவாக்கியது.
இது தனக்குச் சாதகமான வாணிபச் சுதந்திரத்திற்கும், அதையொட்டிய ஏனைய சுதந்திரங்களிற்கும் மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, ஏனைய உரிமைகளிற்குப் பதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப உறவை வெறும் காசு, பண உறவாய்ச் சிறுமையுறச் செய்கின்றது.
இம்முதலாளி வர்க்கமே தனக்கெதிரான பாட்டாளி வர்க்கத்தினைத் தோற்றுவித்து, அதற்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் வளங்குகின்றது. அதாவது இது தன்னை வளர்ப்பதற்காக மேற்கொள்கின்ற செயற்பாடுகளான, விவசாயிகளிற்கிடையிலும், ஏனைய சிறுமுதலாளிகளிற்கிடையிலும் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களைச் சிதறடித்தல்ச் செயற்பாட்டைச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை வலுப்படுத்தி, ஒழுங்குபடுத்துகின்றது. இது அதன் அழிவிற்கும் காலாகின்றது என்பதே முக்கியமானதொரு முரண்பாடாகும்.
அந்தவகையிலே காலம் காலமாக இடம்பெற்று வருகின்ற முதலாளித்துவத்துவத்தின் சுரண்டல் கொடுமைகளிற்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து, அவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் சம்பவங்களும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இதுவே வர்க்கப் புரட்சி அல்லது வர்க்கப் போராட்டம் என அழைக்கப்படுகின்றது.
வர்க்கப் போராட்டம் அல்லது வர்க்கப் புரட்சி
சமூகத்திலே சிறுபான்மையாக உள்ள முதலாளி வர்க்கத்தினர், பெரும்பாண்மையாக உள்ள தொழிலாளர்களைத் தம் செல்வத்தின் செல்வாக்கினாலும், அரசியந்திரத்தின் மீது தாம் கொண்டுள்ள அதிகாரத்தின் காரணமாகவும் அடக்கியாழ முற்படுகின்றனர். ஆவர்களின் உரிமைகளை தங்களின் சுகபோகங்களிற்காக பூரணமாக வழங்க மறுக்கின்றனர். இதனால் அரச அதிகாரத்தினைக் கைப்பற்றுவதன் மூலமாகத் தங்களது உரிமையையும், சுதந்திரத்தையும் வென்றெடுக்க விளையும் பாட்டாளிகள் புரட்சிசெய்கின்றனர். அது வெற்றியடைகின்றபோது அவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வதிகார அரசைத் தோற்றுவிக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில் 90மூற்கு மேற்பட்டவர்களைக் கொண்டதான தொழிலாளர் வர்க்கச் சர்வதிகாரமே உண்மையான சமவுடமையாக, சனநாஜகமாக அமைகின்றது.
அதாவது, காலங்காலமாக வர்க்கங்களிடையே நிலவுகின்ற சமரசப்படுத்தமுடியாத வர்க்க முரண்பாடானது பல்வேறு காரணிகளினால் முட்டி, மோதி, வெடிக்கின்ற நிலையினையே வர்க்கப் புரட்சி என்பர்.
மார்க்சியவாதிகள் “சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு சமூகத்திலும் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் இயக்கவிசையாக அமைகின்றது.” என்பர்.
சமுதாயத்திலுள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தாழ்வுற்ற நிலையும், ஒடுக்குமுறையாளர்களினால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுமே, அவர்களைப் புரட்சிகரச் செயற்பாட்டிற்கு உந்தித்தள்ளுகின்றது.
இவ் வர்க்கப் போராட்டமானது சாதரணமான அடயாள வேலைநிறுத்தம் முதற்கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு வரையாகப் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றது. வர்க்கமுறைச் சமுதாயத்தில் எப்பொழுதும் வர்க்கப் போராட்டமானது இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். வெளிப்படையாக நோக்கும் போது அமைதியாத் தெரிகின்ற சந்தர்ப்பத்தில் கூட உள்ளார்ந்தமாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கும் என்கின்றனர்.
இதையே பாரதிதாசன்
“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆயிடுவர் உணரப்பா நீ ”
என்கிறார்.
இப் போராட்டம் இன்று ஆயுதமேந்திய புரட்சியாக மாத்திரமன்றி, அமைதியான சனநாயக வளிப்பட்ட தேர்தல் முறையினூடாகவும் தனது இலக்கை அடைகின்றது. இது பூர்ஸ்வா வர்க்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வலுவிலேயே தங்கியுள்ளது.
வர்க்கமுறையின் எதிர்காலம் தொடர்பான மார்க்ஸியக் கருத்துக்கள்
“பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலக் கடமையானது வர்க்கங்களைச் சமப்படுத்துவது அன்று, மாறாக வர்க்கங்களை இல்லாது ஒளிப்பதே ஆகும்”
என்கிறார் லெனின்.
அதாவது, சமுதாயம் முழுமைக்குமே சொந்தமாய் இருக்கவேண்டிய உற்பத்திச் சாதனங்கள் வி~யத்தில் குடிமக்கள் அனைவரையும் ஓரேமாதிரியான உறவில் வைப்பதையே இது குறித்து நிற்கின்றது.
உற்பத்திச் சாதனங்களையும், ஆலைகளையும் இயக்குவதற்கான வாய்ப்புக்களைச் சமமாகப் பகிர்ந்து எல்லாக் குடிமக்களிற்கும் கொடுத்தலையே இக்கூற்று குறித்துநிற்கின்றது.
வர்க்கங்களை ஒழிப்பதானது ஓர் நெடிய நிகழ்ச்சிப் போக்காகும், இதற்கு N~hசலிசப் புரட்சியைத் தொடர்ந்து ஒரு முழு வரலாற்றுச் சகாப்தமே தேவைப்படும் என்கின்றனர். N~hசலிசப் புரட்சியானது வர்க்கங்களை ஒழிப்பதற்கான வழியைத் திறந்து விடுகின்றது.
எனவே எதிர்காலத்தில் கம்யூனிச அடித்தளம் நிறுவப்படுகின்ற போது வர்க்கமுறையின் அடித்தளமானது ஆட்டங்கண்டு சரிந்து விடுகின்றது. அதன் பின் வர்க்கபேதமற்ற பொதுவுடமைச் சமுதாயம் தோன்றும்.
முடிவுரை
வர்க்கமுறை தொடர்பான மார்க்சிசக் கருத்துக்கள் பற்றி இதுவரை ஆராய்ந்த விடயங்களின் சாராம்சத்தினை நோக்கினோமானால், வர்க்கப் பாகுபாடு என்பது காலங்காலமாக பொருளாதாரம், தனிச்சொத்துடமை, உற்பத்திசாதனங்களின் உடைமை என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுகின்ற மனித சமுதாயத்தின் பெரும் பிரிவினையைக் குறித்துநிற்கின்றது.
இது வரலாற்றுக் காலங்களில் ஆண்டான் - அடிமை, நிலப்பிரபு – விவசாயி எனும் வடிவங்களில் வழங்கி வந்து, இன்று முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளி – தொழிலாளி எனும் பிரிவாக நிலைத்துள்ளது. இந்நிலை தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் காரணமாக மாற்றமடைந்து வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும்.

புதன், 3 பிப்ரவரி, 2010

சங்கமருவியகாலச் சமயநிலை

அறிமுகம்
சங்கமருவிய காலம் என்பது தமிழகப் பண்பாட்டு வரலாற்றிலே அறம் வலியுறுத்துகின்ற இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைக் குறித்து நிற்கின்றது. இதை அறிஞர் ‘அறநூற் காலம்’ எனவும் அடயாளப்படுத்துவர். அதுவே இலக்கிய வரலாற்றுக்குச் சாலப் பொருத்தமாகவும் அமைகின்றது.
இக்காலத்திலே சேர, சோழ, பாண்டிய அரசுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில், அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றனவும், வைதீக மதங்களான சைவம், வைணவம் என்பவற்றுடன் ஏனைய துணைச் சமயங்களான பாசுபதம், கபாலிகம் போன்றனவும் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்கிய சமயங்களாக இருந்துள்ளன. இவற்றைப் பின்பற்றுகின்ற மக்கள் இச்சமயங்களிற்குரியதான பல்வேறுபட்ட கரணங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இக்காலச் சமயநிலையினை அறிந்துகொள்ள, இக்காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவும் எமக்கு உறுதுணை புரிகின்றன.
சங்கமருவியகாலச் சமயங்கள்
சங்கமருவிய காலத்திலே தமிழ்நாட்டில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம் போன்ற பல மதங்கள் மக்களால் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றை நாம் பிரதானமாக வைதீக சமயங்கள் (சைவம், வைணவம், பாசுபதம், காளாமுகம், கபாலிகம்), அவைதீக சமயங்கள் (சமணம், பௌத்தம்) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
இக்காலமானது தமிழ்நாட்டுச் சமயங்களில் பற்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியாகும். அவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு, இக்காலச் சமயநிலையை மிகத்தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். எனவே, இக்காலத்தில் இடம்பெற்ற மதரீதியான மாற்றங்களைப் பின்வருமாறு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.
• சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை:
தமிழரின் வழிபாட்டில் ஆரியக் கலப்பு இடம்பெற்றமையும், அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
• சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை:
அவைதீக மதங்களின் எழுச்சியும், உச்சமும்.
• சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை:
வைதீக மதங்களின் மறுமலர்ச்சி.
இவற்றில் முதலாவது பிரிவின் தொடக்கம் சங்ககால இறுதியில் ஆரம்பிக்கின்றது. அதேபோல் மூன்றாவது பிரிவின் உச்சம் பல்லவர் காலத்தில் இடம்பெறுகின்றது.
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை
சங்கமருவியகாலத் தொடக்கத்தில் சமயநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்குச் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியிலும், சங்கமருவியகால ஆரம்பப் பகுதியிலும் தோன்றியவையான கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் மிகவும் உறுதுணை புரிகின்றன.
இவை தரும் தரவுகளின் அடிப்படையில் நோக்கினோமானால், இக்காலப்பகுதியில் பின்வரும் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
1. தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை.
தமிழரின் வழிபாட்டில் ஆரியக்கலப்பு இடம்பெற்றமை என்பது, இயற்கை வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் அழித்து, ஒவ்வொரு நிலத்திற்கும் சேயோன், மாயோன், கொற்றவை போன்ற ஒவ்வொரு தெய்வத்தினை முன்நிறுத்தி, மது அருந்தி, பெண்களுடன் இணைந்து நடனமாடிக் களித்து, மாவீரர்களை நடுகற்களில் வணங்குகின்ற வழிபாடுகளை மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களின் வழிபாட்டு முறைகளைத் தாண்டி, வேள்விகள், யாகங்கள் செய்து இந்திரன், வருணன், அக்னி போன்ற தேவர்களிற்கு முதன்மை கொடுத்து வணங்குகின்ற ஆரிய வழிபாட்டு முறைகள் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றமையையே குறித்து நிற்கின்றது.
இதன் விளைவுகளாகவே, ஆரிய மணவினைக் கரணங்கள், பல்வேறு தேவைகளின் பொருட்டு (மழை வேண்டி, காவல் வேண்டி, வளம் வேண்டி) யாகங்கள், வேள்விகள் செய்தல் போன்றன தமிழர் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றது. அத்துடன் ஆரிய வேதத்திலும், இதிகாச புராணங்களிலும் போற்றப்படும் கடவுளர்களான துர்க்கா, உமா, லக்~;மி, சரஸ்வதி, பிரம்மா, காமன், இந்திரன், வருணன், அக்னி, வி~;னு, ருத்ரன், கிருஸ்ணன், பலராமன், ராமன், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் தமிழர்களால்ப் போற்றி வணங்கப்பட்டதுடன், சில கடவுளர் ஏற்கனவே இருந்த தமிழ்க் கடவுள்களுடன் முறையே துர்க்கா, உமா போன்றோர் – கொற்றவையுடனும், லக்~;மி – திருமகளுடனும், வி~;னு, கிருஸ்ணன், ராமன் போன்றோர் - திருமாலுடனும், ருத்ரன் - சிவனுடனும், ஸ்கந்த, சுப்றமணியன் போன்றோர் - முருகனுடனும் இணைக்கப்பட்டனர்.
இதற்கு ஆதரரங்களாக, சிலப்பதிகாரத்தில் விபரிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் மிகவும் விமரிசையாக, பல நாட்கள் கொண்டாடப்பட்ட இந்திர விழா, காமன் விழா, ஓண விழா (கிருஸ்ணனின் பிறந்தநாள் விழா) போன்றவற்றையும்,
ருத்ரன் - கொடுகொட்டி ஃ கொட்டிச் சேதம்
கிருஸ்ணன் - அல்லியம், மல் ஆட்டம், குடக்கூத்து
முருகன் - துடி ஆடல், குடைக் கூத்து
பார்வதி ஃ துர்க்கா – பாண்டரங்கம், மரக்காலாட்டம்
லக்~;மி - பாவைக்கூத்து
இந்திராணி – கடையக் கூத்து
போன்ற கடவுளருடைய ஐதீகக் கதைகளுடன் தொடர்புபட்ட ஆடல் வகைகளையும், திருப்பாவை (வி~;னு), திருவாதிரை (சிவன்) போன்ற விரதங்களையும் குறிப்பிடலாம்.
2. அவைதீக மதங்களின் அறிமுகமும், பரவலும்.
சங்க காலத்திற்கு முன்னரேயே வடஇந்தியாவில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த அவைதீக மதங்களான சமணம், பௌத்தம் போன்றன, அதே காலப்பகுதிகளிலேயே தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகியிருந்த போதிலும், அக்காலச் சமூகப்பின்னணியும், பின்வந்த சங்ககாலத் தமிழ்நாட்டுப் பண்பாடும் அவற்றை நகரங்களைத் தாண்டிப் பரவலாக அறிமுகமாக இடமழிக்கவில்லை. இதனால் இவை மிகச்சிறிய அளவிலேயே தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
ஆனால் சங்ககாலத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற இடையறாத போர்கள், சமூகச் சீர்கேடுகள், கொள்ளைகள், சுரண்டல்களால்ப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்வு வாழ்வதற்காய், சாந்தி, சமாதானம், துறவறம், பற்றற்ற நிலை, பஞ்சமாபாதகங்கள் என்பனபோன்ற கருத்துக்களிற்கு முக்கியத்துவமளித்த சமண, பௌத்த மதங்களைப் பின்பற்றலாயினர்.
இதற்கு இக்காலத்தில் இடம்பெற்ற வணிக வர்க்கத்தின் எழுச்சியும் மிகமுக்கியமான காரணமாகும். அதாவது, பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணம் செய்து, பாதுகாப்புடன் கொள்வனவு, வியாபாரத்தினைச் செய்வதற்கும், மக்களின் நுகர்வுச் சக்தியை அதிகரிப்பதற்கும் நாடுகளிற்கிடையில் அமைதி நிலவுவது அக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
சமூகத்தில் உற்பத்தியாளனின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கவும், சுரண்டலைச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செய்வதற்கும், தொடர்ந்து பொருள்மேல் பொருளீட்டிப் பெரும் பணக்காரர்களாக உருவெடுக்கும், உற்பத்தியில் எவ்வித பங்களிப்பையும் வளங்காமல், வெறுமனே இடைத்தரகர்களாக இருந்துகொண்டு உற்பத்திப் பொருளின் பெறுமதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற வணிகர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்கும், கொலை, களவு போன்றவற்றை முதன்நிலையான குற்றங்களாக கருதி வன்மையாகக் கண்டித்து மறுதலிக்கும் பஞ்சமாபாதகக் கருத்தியலும், ஊழ் - விதி, அறம் போன்றன பற்றிய சிந்தனைகளும் மிகவும் உறுதுணை புரிகின்றன.
பல்வேறு பிரதேசங்களிற்கும், நாடுகளிற்கும் பயணங்களை மேற்கொண்டு நீண்ட காலம் வீட்டைப் பிரிந்து வியாபாரம் செய்வோருக்கு, அவர்தம் வீட்டையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு கற்பு, பிறர்மனை நாடாமை, கள்ளுண்ணாமை பற்றிய அவைதீக மதங்களின் கருத்துக்கள் உதவி புரிகின்றன.
இக்காலத்தில் மதங்களிற்கிடையில் எவ்விதமான உட்பூசல்களும் காணப்படவில்லை. அவை அருகருகே அமைதியாக வளற்சியடைந்து வந்துள்ளன. இவற்றுக்கு ஆதாரமாக பினவரும் சிலப்பதிகாரப் பாடலினைக் குறிப்பிடலாம்.
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
……
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து உருபால்
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”
(சிலப்.இந்திர.169)
இக்காலத்தில் இயற்கை வழிபாடும் குறிப்பாக மரங்களையும், விலங்குகளையும் வழிபடுதலும் நிலவியுள்ளது. அத்துடன் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகக் காவல்த் தெய்வ வழிபாடும் இக்காலத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் அமைகின்றது.
“காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
பூழுக்களும் நோலையும் விழுக்கு உடைமடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையின் அணங்கு எழுந்தாடி” (சிலப். 67:70)
சங்கமருவியகால நடுப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகாலத்தின் நடுப்பகுதியில் அவைதீக மதங்கள் தமிழ்நாட்டில் மிகவும் எழுச்சிபெற்று உச்சத்தில் இருந்துள்ளன. இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இக்காலத்திலே தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவைதீக மதத்தவர்களால் இயற்றப்பட்டவை பெரும்பான்;மையாக அமைந்திருப்பதைக் கூறலாம்.
இக்காலச் சமணர்களும், பௌத்தர்களும் பாளி, ப்ராக்ருதம், வடமொழி போன்றவற்றுக்கு முக்கியத்துவமளித்தாலும், தமிழின் இலக்கிய வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர்களாக விளங்குகின்றனர். அவைதீக மதங்களைச் சேர்ந்தோரே தமிழ்நாட்டில் பாடசாலைக் கல்வியை அறிமுகம் செய்து வைத்தோராவர். இவர்களின் இருப்பிடங்களிற்கு, மதஸ்தாபனங்களிற்கு வழங்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பெயர் இன்று கல்விச்சாலைகளிற்கு வழங்கப்படுகின்றமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் சங்கங்களை ஏற்படுத்தி தமிழையும், தமது சமயத்தையும் வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் இவர்கள் இக்காலப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்கத்தைக் (இதைச் சிலர் ‘திராவிட சங்கம்’ எனவும் குறிப்பிடுவர்) குறிப்பிடலாம்.
இவ்வாறாக, வணிகவர்க்கத்தினரால் போற்றிப் போசித்து வளர்க்கப்பட்ட இவ் அவைதீக மதங்கள், சங்கமருவிய காலத்தின் நடுப்பகுதியில் அரசர்களின் ஆதரவையும் பெற்று மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றனவாக, ஏனைய வைதீக மதங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிச் சிறந்து விளங்கின.
சமணம்
தமிழ்நாட்டில் சமணம் மதுரை மாநகரை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தது. ஆனை மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், சமணர் மலை, கழுகு மலை, சித்தன்ன வாசல், சித்தர் மலை போன்ற பெருங்குன்றங்களில் குகைகளை அமைத்தும், கீழைவழவு, முத்துப்பட்டி போன்ற பிரதேசங்களிலும் சமணமுனிவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமது மதப்பணிகளையும், சமூகப்பணிகளையும் ஆற்றிவந்தனர்.
இவர்கள் அருகன் என்னும் கடவுளை முழுமுதலாகக் கொண்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பின்வரும் வைதீக சமயத்தாரின் பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
“பாளியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவுமாகிச்
சூழிருட் குழக்கள்போல தொடைமயிற் பீலியோடு
மூழுநீர் கையிற்பற்றி அமணரேயாகி மொய்ப்ப”
இக்காலத்தில் தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம், நீலகேசி போன்ற காப்பியங்களுடன், திருக்குறள், நாலடியார், ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, தொல்காப்பியம் போன்றன சமணர்களால் ஆக்கப்பட்டவையாகும்.
பௌத்தம்
இக்காலத்தில் பௌத்தம் பெற்ற இடத்தினை நோக்கினோமானால், அது சமணசமயத்தைப் போல் தமிழ்நாட்டில் மிகுந்த ஆதிக்கத்தினைச் செலுத்தவில்லை என்பதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. காவிரிப்ப+ம்பட்டணம், காஞ்சி, முசிறி, புகார், கொற்கை போன்ற துறைமுக, வணிக நகரங்களில் இவர்களின் செல்வாக்கு மிகவும் ஓங்கிக் காணப்பட்டது.
மணிமேகலை, திரிகடுகம் போன்ற பல இலக்கியங்கள் இக்காலப் பௌத்தர்களால் இயற்றப்பட்டவையாகும். இவர்கள் மடங்களின்மூலம் பல மக்களுக்கான தொண்டுகளையும் ஆற்றிவந்துள்ளனர். மணிமேகலையில் துறவறத்திற்கும், மக்கள் தொண்டுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் மூலம் நாம் இதை மிகத்தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
சங்கமருவியகால இறுதிப்பகுதியில் சமயநிலை
சங்கமருவியகால இறுதிப்பகுதியை நாம் வைதீக மதங்களின் மறுமலர்ச்சிக் காலம் என அடயாளப்படுத்த முடியும்.
அவைதீக மதங்களின் அதிகரித்த கட்டுப்பாடுகளினால் மக்களிற்கு அவற்றின்மீது சலிப்பும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. அவை இவ் உலக இல்வாழ்வை வெறுத்து ஒதுக்கித் துறவறத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் அதேநேரத்தில், அவைதீக மதத்தலைவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் சக்திகளாக விளங்கினர். அரசனுக்குரிய சுகபோகங்களையும் சிலவேளைகளில் அனுபவித்தனர். இவற்றின் மதஸ்தாபனங்கள் பெரும் சொத்துடைமை நிறுவனங்களாக விளங்கின. இவை இவர்களின் கொள்கைகளிற்கு நேர் முரனானவையாக அமைந்திருந்தன. இது சாதாரண மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
முன்னர் இறைநிலையில் வைத்துப் போற்றப்பட்ட பெண்களை, ஆண்மீகத் துறவற வாழ்வுக்குத் தடையான மோகத்தை ஏற்படுத்தும் போகப் பொருட்கள் எனக் கூறி நிராகரித்தனர். மிகவும் கேவலமாக நடத்த முற்பட்டனர். இக்கருத்தியல்களால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வை இளந்த புனிதவதியாரே பின்னர் காரைக்காலம்மையாராகி அவைதீக மதங்களிற்கு எதிரான வைதீகச் சமயங்களின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு அடிகோலினார்.
அதேநேரத்தில் வணிகவர்க்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளும் இவ் அவைதீக மதங்களிற்கு எதிரான போக்கிற்குக் காரணமாக அமைந்தது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, முதலாழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் நிலப்பிரபு வர்க்கத்தில் இருந்து தோற்றம் பெற்றமையைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சமூக, பொருளாதார, அரசியற் காரணிகளினால் சங்கமருவிய காலத்தின் இறுதிப்பகுதியில் அவைதீக மதங்களிற்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பமாகி, பின்வந்த பல்லவ பாண்டியப் பேரரசர் காலப்பகுதியில் பேரியக்கமாக மாறி, தமிழ்நாட்டிலிருந்து அவைதீக சமயங்களையே காலப்போக்கில் அகற்றிவிட்டன.
இக்காலப்பகுதியில் வைதீக மதங்களான சைவ, வைணவ சமயங்களுக்கிடையில் எந்தவிதமான உட்பூசல்களும் நிலவவில்லை. இவை இரண்டும் இணைந்து நின்றே போராட்டத்தை முன்னெடுத்தன. இத்தன்மையை நாம் ஹரிஹர வடிவத்தின் தேவையினூடாக விளங்கிக்கொள்ளமுடியும்.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம், தமிழ் நாட்டிலே அவைதீக சமயங்கள் ஏனைய வைதீக சமயங்களைத் தாண்டி உச்சம் பெற்றுத் திகழ்ந்த ஒரு காலமாக சங்கமருவிய காலத்தைக் கொள்ளமுடியும். அதன் பயனாகவே தமிழிற்கு உலகப் பொதுமறையான ‘திருக்குறளும்’ குடிமக்கள் காப்பியமான ‘சிலப்பதிகாரமும்’ மிகச்சிறந்த தமிழிலக்கண நூலாகிய ‘தொல்காப்பியமும்’ கிடைத்தன.
அத்துடன், அதுவரை மக்கள்மீதோ, அறம் என்னும் கருத்தியல்மீதோ அக்கறை காட்டாத தமிழர் வழிபாட்டு முறையுள் ஒழுக்க விழுமியங்கள் முக்கியத்துவம் பெறவும், மக்களை நோக்கியதாக மதங்கள் வளர்ச்சியடையவும் இக்காலச் சமூக, சமயப் பின்னணிகள் வழிகோலின. எனவே தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இக்காலத்தில் இடம்பெற்ற மாற்றங்களின் தாக்கத்தை நாம் இன்றுவரை காணக்கூடியதாக உள்ளது.

மீண்டும் வா சே குவேரா

மீண்டு வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
எல்லைகள் கடந்த ஊரா!

மானுட விடுதலைக்காய் மரணத்துள் வாழ்ந்தவனே,
மானுடம் மரணித்தபோது அதைனை நீ வென்றனையே.

உலகை ரட்சிக்க வந்த தேவனா நீ - இல்லை
உழைப்பைக் கர்ச்சிக்க வந்த தீரனே நீ.

தந்தை மார்க்சின் தனி வளிகாட்டலே – எந்தையே
இந்த யுகத்தின் இளவலே.
மார்க்ஸ் எனும் அறிஞன் மாற்றத்தை வேண்டினான்
சே என்னும் வீரன் அதைச் செயலிலே காட்டினான்.

முதலிடமிருந்து 3ஆம் உலகினை மீட்க
முயன்றவனே – அதற்காய்
முற்றும் துறந்த முனிவனே – பல
மூர்த்தங்களான கவிஞனே.

மீண்டும் வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
மீட்டுவோம் இடது வீணை.

வேண்டுதல் செய்யமாட்டோம் - வெறும்
வெகுளியாய் எழவும் மாட்டோம்.
தொண்டுகள் செய்திறஞ்சும் - நம்
தோழரின் உரிமை மீட்போம்.

எழு தோழனே!

எழு தோழனே!
முழு உலகையும்
நம துறவென ஆக்குவோம் - அதை
நம் கையிலே தூக்குவோம்.

சிலர் ஆழவும் - ஒரு
சிலர் வாழவும் - உள
உயர் விதிகளை மாற்றுவோம்.
புலர் வேளையில்
மலர்ப் பூமியை
புதி தானதாய் அக்குவோம்
அலர் நீங்கிட அறவாளினால்
அடி மைத்தனம் போக்குவோம்.

பிறர் வாழ்ந்திடப் பலர் மாய்கிற - இழி
நிலைமயை நீக்குவோம்
உழைக்கின்றவர் உயர்வெய்திட
உயிர்த் தீயினை ஊற்றுவோம்.

புதன், 27 ஜனவரி, 2010

தென்னிந்தியப் பாடகர்களும் இலங்கை ஊடகங்களும் இணைந்து செய்த கலை விபச்சாரம் - அண்மையில் யாழில் இடம்பெற்ற இசைக்கச்சேரி பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் தமிழ்த் திரைப்படப் பாடகரான மாணிக்க விநாயகம் ("இவர் இதுவரை ஒரு ஒழுங்கான பாடல் பாடியதாக நான் அறியவில்லை"- இது அவர் தவறு அன்று) உள்ளடங்கலான இந்தியப் பாடகர் குழுவொன்று இசைக்கச்சேரி செய்ய உள்ளதாக நண்பர் வாயிலாக அறிந்தேன். இது இலங்கையின் முதல்தர (அறுவை, அலம்பல் அற்ற) வானொலியான சூரியனினதும், நடுநிலை தவறாத நாளிதளான தினகரனினதும் ஏற்பாட்டில் இடம்பெற்றது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
ஊர் இளவட்டம் 20 கிலோமீற்றர் சைக்கில் பயணம் செய்து கச்சேரி பாக்கப் போறதா எனக்கு தகவல் வந்தது. அந்தப் பயணப் பம்பலுக்காக நானும் போக முடிவெடுத்தன். இரவுக் கூத்து என்பதால் அப்பாவிடம் தகவலைத் தெரிவிப்பது அவசியமாகப் பட்டது. ஆனால், அவரின் பதிலோ “போன கச்சேரியிலை நடந்தது தெரியுமே? கவனம்” என எச்சரிக்கையாய் விழுந்தது.
என்ன போன இசைநிகழ்விலை நடந்தது? நடத்தினவை தொடக்கம் இந்தியாவில் இருந்து வந்த விஜய் அன்ரனி வரை நிகழ்ச்சி பெரிய வெற்றி எண்டுதானே பேட்டி குடுத்தவை. பொடியளிட்டை லேசாக் கதையைவிட்டன். என்னண்ணை உங்களுக்கு ஒண்டும் தெரியாதே? வானத்தில மண், தண்ணி, (மூத்திரம் உட்பட) நிரப்பின போத்திலுகள் பறந்தது (லைற்றுக்கு முன்னால பறந்து வண்ணமயமான வானவேடிக்கையாக அமைந்ததாம்), பொலிஸ் அடிச்சுத் துரத்தினது, ஒண்டும் நீங்க கேள்விப்படேல்லையே? என்டாங்கள்.
இப்பிடியே கடந்துபோன கலவரங்களப் பத்திக் கதைச்சுக்கொண்டே ஒருமதிரி 8மணிபோல துரையபப்பா ஸ்ரேடியத்துக்குப் போய்ச் சேந்தம். அங்க சனம் வெளியில போறது கொஞ்சம், உள்ளுக்குப் போறது கொஞ்சமா இருக்க, எனக்கு ஒருவேள நிகழ்ச்சி முடிஞ்சுதோ? எண்ட சந்தேகம் வந்திட்டுது. உள்ளுக்குப் போனாப் பிறகுதான் விளங்கிச்சு, போனவை நிகழ்ச்சி முடிஞ்சு போகேல்ல, இருக்கச் சகிக்காமல் போகினமெண்டு. மேடையிலை நிகழ்ச்சி செய்ய வந்த பொம்பிளையளை விட பாத்த பொம்பிளையள் குறைவு. அதேமாதிரி, நிகழ்ச்சிக்கு நடந்து வந்த ஆம்பிளையள் மிகக்குறைவு, மிதந்து வந்தவைதான் முக்காவாசி. அடுத்த நிகழ்ச்சிய சோமபாண வியாபாரிகள்தான் நடத்துவினை, ஏனெண்டால் இதுகளாலை நிறைய வருமானம் அவைக்குத்தானே.
நாலு மங்கலான திரைகள்ளையும் ஒரு மேடையிலையும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திச்சு. சுத்திவர நிறயப் பொலிஸ் நிண்டாலும், பரவலாப் பலரும் சுதந்திரமாத் தம் அடிச்சுக்கொண்டு திரிஞ்சிச்சினம். சரி மேடயில என்ன நடக்குதெண்டு முயற்சி செய்து முன்னுக்குப் பேப்பாத்தன். நல்ல கல(குலு)க்கலான நடனமொண்டு போச்சுது. அது முடிய, இந்தியாவிலிருந்து வந்த கலைஞற்றை பாட்டுக்கள் போச்சுது. அதுகள்ள விசேஸமாச் சொல்லக்கூடியதா “சின்ன வீடா வரட்டுமா…” மாதிரி நிறையத் தத்துவப்பாடல்களைப் பாடிச்சினம். இதில ஒரு முக்கியமான வி~யம் பாருங்கோ, பாத்தவை யாரும் கடசிவரை (எ.இ.மனோகரன்ர பாட்டுக்களைத் தவிர) கைதட்டேல்லை. சிலநேரங்கள்ள மேடையில இருந்து கெங்சிக்கூடக் கேட்டுப் பாத்தினம். பதிலுக்குத் தூசணங்கள் பறந்திச்சே தவிர ஒரு மரியாதைக்குக் கூடச் சனம் கைதட்டேல்லை எண்டாப் பாருங்கோவன். பாட்டுகளுக்கிடையில பயங்கரவாதத்தை அழிச்ச தலைவருக்கு மறக்காமல் நன்றி சொல்லிச்சினம். எனக்கெண்டா மினக்கெட்டு வந்ததுக்கு ஒரு உருப்படியான பாட்டாவது படிக்க மாட்டாங்களோ என்ட கவலை. ஆனாப் பக்கத்தில நிண்டவனுக்கு வேட்டக்காரன் - புலி உறுமுது என்ட பாட்டில்லயே என்டு கோபம். அதுக்குள்ள பிற்பாட்டுக்கு வந்த உறண்டை ஒன்டு வளைஞ்சு நெளிஞ்சிச்சு, ஆரெண்டா? சக்தியின்ர குப்பஸ்ராறாம்.
நான் இந்த அநியாயங்களுக்குள்ள என்னோட வந்த நாசகாரக் கும்பலையும் தவற விட்டுட்டன். இன்னும் கொஞ்சநேரம் நிண்டால் மண்டை வெடிக்கும் போல இருந்திச்சு. வெளியிலை வந்து சும்மா வளவுக்குள்ள நிண்ட சைக்கிளைப் பாதுகாத்ததுக்குப் பத்துருவாயைக் குடுத்துவிட்டு, குண்டி நொந்தாலும் அதைக் கணக்கெடுக்காமல் வீட்ட பறந்தன்.

யுத்தம் பற்றிய சமகால ஈழத்துக் குறுந்திரைப்படங்கள் - ஒரு நோக்கு

பகுதி 01
இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்திலே, மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ள இலத்திரனியல் ஊடகத்துறையில் தொலைக்காட்சி, திரைப்படம் போன்றன மிகவும் குறிப்பிட்டுக் கூறத்தக்கனவாக விளங்குகின்றன. இவற்றில் திரைப்படமானது கதைசார்ந்தன, கதைசாராதன என இரண்டு வகைப்படும். இவற்றுள் கதைசார்ந்த திரைப்படங்கள் அவற்றின் நேர அளவை அடிப்படையாக வைத்து முழு நீளத்திரைப்படம், குறுந்திரைப்படம் என மேலும் வகைப்படுத்தப்படுகின்றன.

முழு நீளத்திரைப்படம் என்பது ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட நேர அளவைக் கொண்ட, ஆரம்பம், வளர்ச்சி, எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள், உச்சம், முடிவு என்ற கட்டமைப்புடைய திரைக்கதையை கொண்ட திரைப்படங்களைக் குறித்து நிற்கின்றது. வெறுமனே திரைப்படம் எனக் கூறும்போது அது முழுநீளத்திரைப்படத்தினையே சுட்டி நிற்கின்றது.

முழு நீளத்திரைப்படம் அதன் பாரியளவிலான முதலீட்டுத் தேவையின் காரணமாக, பெரும்பாலும் பணபலம் படைத்த மேற்தட்டு வர்க்கத்தினரின் கைகளிலேயே காணப்படுகின்றது. இதனால், அது இன்று வெறும் பொழுதுபோக்கு வடிவமாக உருவெடுத்து நிற்கின்றது. அது மட்டுமல்லாமல், வெறும் பொருளாதாரப் பண்டமாக மாறிப்போன நிலையையும் அவதானிக்க முடிகின்றது. (விதி விலக்குகள்)

இதற்கு மாற்றாக அமைகின்ற திரைப்பட வடிவமாக குறுந்திரைப்படம் விளங்குகின்றது. குறுந்திரைப்படத்தை “ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேர அளவினுள், ஒரு குறிப்பிட்ட கருவை அல்லது விடயத்தை அல்லது சம்பவத்தை முன்னிறுத்தி, குறைந்த பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற திரைப்படம்” என வரையறை செய்து கொள்ளமுடியும். இதில் நேர அளவு இடத்துக்கிடம் வேறுபடுகின்றபோதும், குறித்த ஒரு விடயம் எனும் அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்படுகின்ற பொதுப் பண்பாகக் காணப்படுகின்றது. (திருக்குறள், சிறுகதை)

குறுந்திரைப்படமானது அதன் உருவாக்க இலகு, விடய எளிமை, நேரச் சுருக்கம், உணர்வுச் செறிவு என்பனவற்றின் காரணமாகக் கட்புல ஊடகங்களில் மிகவும் முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. அதாவது, பொருட்செலவு, தொழில்நுட்பம், உழைப்பு என்பனவற்றின் குறைவான தேவைப்பாட்டினால் உருவாகின்ற இலகுவான தன்மை, விடயம் அல்லது கரு, நேரம் போன்றவற்றின் சுருக்கம், ஏற்படுத்தும் தாக்கத்தின் வன்மை என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

குறுந்திரைப்பட உருவாக்கத்தினைப் பொறுத்தவரை, கணினித்தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்ட இன்றைய சூழலில், அது பலருக்கும் சாத்தியமான ஒரு கலை வடிவமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீளத் திரைப்படங்கள் பேச விரும்பாத, பேச மறந்த வாழ்வின் மறுபக்கத்தைப் பேசுவனவாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் திரைக்கலை வெளிப்பாட்டு வடிவமாகவும் இக்குறும்படங்கள் இன்று பரிணாமம் அடைந்துள்ளன.

ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழ் திரைப்பட, தொலைக்காட்சி வரலாற்றில் கடந்த முப்பது வருடங்களாகக் காணப்படுகின்ற ஒருவித தேக்கநிலையானது, ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இக்காலப்பகுதியின் ஈழத்துத் திரைப்படங்களாகக் குறிப்பிடத்தக்கவகையில் இக்காலத்தில் தோற்றம்பெற்ற குறுந்திரைப்படங்களே விளங்குகின்றன. மிகவும் இக்கட்டான இந்தப் பொழுதுகளில் தயாரிக்கப்பட்ட இப்படங்கள், இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிகவும் முகியமான இடத்தைப் பெறுகின்றன. இவற்றைப் பற்றி ப.திருநாவுக்கரசு அவர்கள் “இலங்கைத் தமிழ் குறும்படங்கள் அனைத்தும் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை, கனவு உலகில் போய் முடங்கிக் கொள்வது கிடையாது. சமூக மதிப்பும், ஆவண மதிப்பும் கொண்டவை” எனக்கூறுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிங்களத் திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் குறுந்திரைப்படங்களின் உருவாக்கம் நீளத் திரைப்படங்களுக்குச் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரபல்யமான சிங்களத் திரைப்பட இயக்குனர்கள் பலர் பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். (டெலோன் வீரசிங்க, ஆனந்த அபயநாயக்க)

இன்றைய ஈழத்துக் குறுந்திரைப்படங்கள் என்னும்போது, அது 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஈழத்தில் இடம்பெற்றுள்ள குறுந்திரைப்படத் தயாரிப்புக்களையே சுட்டி நிற்கின்றது. ஒப்பீட்டளவில் இக்காலப் பகுதியிலேயே போர் பற்றிய அதிகமான குறுந்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இதற்கு இக்காலத்தின் ஆரம்பத்தில் நிலவிய சமாதானச் சூழல் மிகவும் முக்கியமானதொரு காரணமாகும்.

இக்காலப்பகுதியில் தமிழகத்திலும், புகலிடத்திலும் சினிமாத் துறையில் வீசிய, வீசுகின்ற வியாபாரச் சொகுசுக் காற்று, ஈழத்தின் குறுந்திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில், ஈழத்தின் தனித்த அரசியல் தன்மையினாலும், சமூகக் கொந்தளிப்புகளாலும், போர்ச் சூழலினாலும் அண்ட முடியாததாகவே உள்ளது எனலாம்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் அதன் அனைத்து அம்சங்களிலும் அண்மைக்காலங்களில் மிகவும் தாக்கம் செலுத்தும் விடயமாக, முப்பது வருடங்களிற்கும் மேலாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப்போர் காணப்படுகின்றது. இதை அவரவர் கருத்தியலிற்கு ஏற்ப இனப்பிரச்சினை, பயங்கரவாதப் பிரச்சினை, இன அழிப்புப் போர், விடுதலைப் போராட்டம் எனப் பல பெயர்களால் அழைத்துக்கொள்வர்.

இதன் தாக்கம் ஈழத்தின் தற்கால கலை, இலக்கியத் துறையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் இப்போர் பற்றியும், அதன் தாக்கம், விளைவு என்பன பற்றியும் பேசுகின்ற குறுந்திரைப்படங்களை பல்வேறு அடிப்படைகளில் பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த வகையில் இவற்றின் கருவை அடிப்படையாகக் கொண்டு,

போரின் பின்னணியை அல்லது போருக்கான அடிப்படைகளைப் பற்றியன

போர்க்காலப் பிரச்சினைகள் பற்றியன

போரின் தாக்கம் அல்லது எதிர்கால விளைவு பற்றியன

என மூன்றாக வகைப்படுத்த முடியும். இக்குறும்படங்களின் வெளிப்பாட்டு முறைமையினை அடிப்படையாகக் கொண்டு,

யுத்தம் பற்றியும், அதன் விளைவுகள், அது தொடர்பான பிரச்சினைகள் பற்றி நேரடியாகப் பேசுவன

இன்றைய அரசியல், யுத்தப் பின்னணிகளில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை முன்வைத்துப் பேசுவன

என இரண்டாக வகைப்படுத்தி நோக்க முடியும். அத்துடன் இவற்றின் தயாரிப்புப் பின்னணிகளின் அடிப்படையில்

சிங்களக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை

தமிழ்க் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை

எனவும் பகுத்து நோக்க முடியும். இவற்றில் முதலாவதான குறுந்திரைப்படங்களின் கருவை அல்லது அவை கூறவிளையும் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாகுபாட்டின் அடிப்படையில் இனி நோக்கலாம் என எண்ணுகின்றேன்.